227 கி.மீ வேகத்தில் காற்று! பயம் காட்டும் ’சாம்பி’ : பரந்து விரிந்த புயலின் கொடூர கரங்கள்!
செய்தியாளர் - கார்த்திகேயன்
பசிபிக் பெருங்கடலின் மேற்கு பகுதியில், கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி அன்று உருவான புயல் தான் சாம்பி. 5-ஆம் வகையை சேர்ந்த இந்த ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த புயல்களில் ஒன்றாக இருந்த சாம்பி, தைவானின் தென்கிழக்கு முனையிலிருந்து சுமார் 520 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது தைவானின் வடகிழக்குப் பகுதி வழியாக நுழைந்து, சீனக் கடற்கரையை நோக்கித் திரும்பி, இறுதியில் தெற்கு ஜப்பானை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, தைவானின் மத்திய வானிலை மையம், புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்த புயலின் மையப்பகுதியில், மணிக்கு 227 கிலோ மீட்டர் வேகத்தில், பலத்த காற்று வீசுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலின் ஆரம் 320 கிலோ மீட்டர் நீளத்திற்கு பரந்து விரிந்து கிடப்பதால், தைவானின் பெரும்பாலான பகுதிகளில், பலத்த சேதங்களை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் வரை இந்த நிலை நீடிக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, கடலோரப் பகுதிகளில் 20 அடி உயரத்திற்கு அலைகள் எழுந்து, பலத்த சேதங்களை ஏற்படுத்தும் என்றும், 3 அடி வரை தீவிர மழை பொழிவு இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, கடற்கரை பகுதிகளுக்கு தேவையின்றி பயணம் செய்ய வேண்டாம் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக, புயலின் தாக்கத்தால், 125-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தைவான் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் ஜப்பானுக்கும் கடந்து செல்ல வாய்ப்பு இருப்பதால், அந்த நாட்டை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ஞாயிற்றுக் கிழமை வரை ரத்து செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. மொத்தமாக 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

