கோழி முட்டையில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த இருவர் கைது
முட்டையில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டில் ‘சிக்ஃப்ரண்ட்’ என்ற ஐரோப்பிய நிறுவனத்தை சேர்ந்த இருவரை டச்சு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
நெதர்லாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் சோதனை நடத்தப்பட்டு பல லட்சம் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த கோழிமுட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், நெதர்லாந்தில் 8 இடங்களிலும், பெல்ஜியத்தில் 11 இடங்களிலும் சோதனை நடத்தி குற்றச்சாட்டுக்கு உள்ளான நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்கள், வாகனங்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. அத்துடன் முட்டையைக் கொண்டு செய்யப்படும் பொருள்களின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. முட்டைகளில் ஃபைப்ரோனில் என்ற பூச்சிக்கொல்லி இருப்பது ஆய்வுகளின் கீழ் உறுதியாகிருக்கிறது. இந்த நச்சினால் சிறுநீரகம், தைராய்டு நாளங்கள் உள்ளிட்ட உடலுறுப்புகள் கடுமையாக பாதிக்கப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.