இரண்டு இந்திய கப்பல்கள் சிறைபிடிப்பு..? அதிரடி காட்டும் ஈரான்.. ராணுவம் சொன்ன காரணம்!
அமெரிக்கா-ஈரான் போர், ஹோர்முஸ் நீரிணை முடக்கம், உலக எரிசக்தி விநியோக பாதிப்பு என பதற்றம் நீடிக்கும் நிலையில், இந்தியா நோக்கி வந்ததாக கூறப்படும் இரண்டு சரக்கு கப்பல்களை ஈரான் ராணுவம் தடுத்து நிறுத்தியிருப்பது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. கடல்சார் பாதுகாப்பு விதி மீறல், நேவிகேஷன் அமைப்பு தவறான பயன்பாடு, அனுமதியின்றி பயணம் ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா ஈரான் இடையே ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த போர் காரணமாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை முடக்கியது. இதனால் உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும், எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டது.
இந்த சூழலில்,பாகிஸ்தான் தலையீடு காரணமாக அமெரிக்கா - ஈரான் இடையேயான போரில் 10 நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆனால், அதன் பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியை தழுவிய நிலையிலும், பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இதனிடையே அமெரிக்காவுடன் உடன்பாடு எட்டப்படாததால் ஈரான் மீண்டும் ஹோர்முஸ் நீரிணையை முடக்கிய நிலையில், ஈரானுக்கு ஆதரவான கப்பல்கள் வெளியேற முடியாமல் அந்த பகுதியில் தனது கடற்படை கப்பல்களை கொண்டுவந்து அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
இந்த சூழலில் ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியா நோக்கி வந்துகொண்டிருந்த இரண்டு கப்பல்களை ஈரான் ராணுவம் சிறைபிடித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. துபாயின் ஜேபல் அலி (Jebel Ali) துறைமுகத்திலிருந்து லைபீரியா நாட்டுக்கொடியுடன் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா (Mundra) துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்தபோது ஒரு கப்பல் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதே போல, பனாமா நாட்டுக்கொடியுடன் இலங்கையின் ஹம்பாந்தோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த மற்றொரு கப்பல் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சில செய்தி நிறுவனங்கள் இந்த கப்பலும் இந்தியா நோக்கி வந்துகொண்டிருந்ததாகவே கூறியுள்ளன.
இந்த கப்பல்கள் கடல்சார் பாதுகாப்பு விதிகளை மீறி, கப்பலின் நேவிகேஷன் அமைப்புகளைத் தவறாகக் கையாண்டதாகவும், முறையான அனுமதியின்றி அந்தப் பகுதியில் பயணித்ததாலும் சிறைபிடிக்கப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

