தூத்துக்குடி டூ இலங்கை: பீடி இலைகளை கடத்த முயற்சி – 16 மீனவர்கள் கைது

தூத்துக்குடி டூ இலங்கை: பீடி இலைகளை கடத்த முயற்சி – 16 மீனவர்கள் கைது
தூத்துக்குடி டூ இலங்கை: பீடி இலைகளை கடத்த முயற்சி – 16 மீனவர்கள் கைது

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல். இலங்கையைச் சேர்ந்த 6 மீனவர்கள் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அனைத்து பொருட்களும் விலை அதிகரித்துள்ளது. எனவே தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு அவ்வப்போது கஞ்சா, மஞ்சள், ஏலக்காய், பூச்சிக்கொல்லி மருந்து பீடி இலைகள் என அனைத்தும் தூத்துக்குடியில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தும் சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதனை தடுக்கும் வண்ணம் கியூ பிரிவினர் தீவிரமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி அருகே நடுக்கடலில் இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான வஜ்ரா என்ற கப்பலில் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நடுக்கடலில் 4 படகுகள் நிற்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இந்திய கடலோர காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று நான்கு படகுகளையும் சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர். இதில், இலங்கையை கல்பட்டி பகுதியைச் சேர்ந்த ரனில்சமரா, உதராகசன், சகான் ஸ்டீவன், சஞ்சீவ், சுதேஷ் சஞ்சீவ சங்கலப்பா ஜீவன்தா மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த இரண்டு விசைப்படகில் இருந்த காட்வின், லெமிட்டன், ராபின், நிஷாந்த், சேவியர், கிங்ஸ்டன், வெர்னோ, கோல்வின், சசிகுமார், டார்வின் ஆகிய மீனவர்கள் இருந்தது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து இந்திய படகில் இருந்து இலங்கையைச் சேர்ந்த இரண்டு படகுகளின் மூலம் இலங்கைக்கு பீடி இலை பண்டல்களை கடத்த இருந்தது தெரியவந்தது. இவர்களிடமிருந்து நான்கு படகுகள் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 1/2 டன் எடை கொண்ட 104 பீடி இலை பண்டல்களையும் பறிமுதல் செய்ததோடு, 16 மீனவர்களையும் கைது செய்து நேற்றிரவு தூத்துக்குடி பழைய துறைமுகத்திற்கு கொண்டு வந்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து இலங்கையை சேர்ந்த ஆறு மீனவர்கள் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த 10 மீனவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் கியூ பிரிவு போலீசார் பீடி இலை கடத்த வந்தார்களா? அல்லது போதைப் பொருள் எதுவும் கடத்த வந்தார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com