லண்டனில் ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டை முற்றுகையிட்ட தமிழர்கள்!
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து லண்டனில் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கட்டிருந்த நிலையில், ஏராளமான போராட்டக்காரர்கள் தடை உத்தரவையும் பேரணி சென்றனர். அப்போது காவல்துறையினர் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் தடை உத்தரவையும் பொருட்படுத்தாமல் போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஜெயராமன், கிளாட்ஸன், கந்தையா, வினிஸ்டா, தமிழரசன், சண்முகம், மற்றும் மணிராஜ் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தை கண்டித்து லண்டனில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வால் வீட்டின் முன், அங்கு வாழும் தமிழர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். அவர்கள் ‘கொலைகார வேதாந்த உள்ளே இருக்கிறார். கொலைகார ஸ்டெர்லைட் உரிமையாளரை கைது செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். 10 உயிர்களைக் கொண்ட அனில் அகர்வால் உள்ளே இருக்கிறார். கண்டிக்கிறோம். கண்டிக்கிறோம்’ என்ற பல முழக்கங்களை எழுப்பினர். மேலும் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு நீதி வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.