Pak-இன் நெருங்கிய கூட்டாளி.. இந்தியாவிடம் கையேந்தும் நிலை.. துருக்கியின் அதிரடி நகர்வு!
அண்டை நாடான பாகிஸ்தானின் மிக முக்கிய கூட்டாளியாக இருக்கும் துருக்கி, தற்போது இந்தியாவின் உதவியை நாடியிருப்பது விவாதங்களைத் தூண்டியுள்ளது. உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களால் துருக்கிக்கான ரஷ்ய டீசல் விநியோகம் குறைந்துள்ளது. இதனால், இந்தியாவின் சுத்திகரிப்புத் திறனையே முதன்மையாகச் சார்ந்திருக்க வேண்டிய சூழல் துருக்கிக்கு ஏற்பட்டுள்ளது.
தூதரக மற்றும் பாதுகாப்புத் தளங்களில் துருக்கி, பாகிஸ்தானின் நெருங்கிய கூட்டாளியாகச் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போதுகூட, துருக்கி அரசாங்கம் ராணுவத் தளவாடங்களை அனுப்பி பாகிஸ்தானுக்கு உதவி செய்ததாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்தச் சூழலில் மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ப் பதற்றம் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவுகிறது. தவிர, விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இன்னொரு புறம், உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களால் ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தவிர, ரஷ்ய அரசு ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இதனால், துருக்கிக்கான ரஷ்ய டீசல் விநியோகம் குறைந்துள்ளது. வழக்கமாக துருக்கி, தனது டீசல் தேவையில் சுமார் 85% ரஷ்யாவிலிருந்தே இறக்குமதி செய்து வந்தது. அதாவது, ஒருநாளைக்கு 2,00,000 பீப்பாய்களுக்கும் அதிகமாக இருந்த ரஷ்ய டீசலுக்கான துருக்கியின் இறக்குமதி, தற்போது நாளொன்றுக்கு சுமார் 80,000 பேரல்களாகக் குறைந்துள்ளது. இதையடுத்து, இந்தியாவின் உதவியை துருக்கி நாடியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் நெருக்கடி காரணமாக, தனது உள்நாட்டுப் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிசெய்ய இந்தியாவின் சுத்திகரிப்புத் திறனையே முதன்மையாகச் சார்ந்திருக்க வேண்டிய சூழல் துருக்கிக்கு ஏற்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2026 தரவுகளின்படி (Kpler தரவு நிறுவனம்), துருக்கி இந்தியாவில் இருந்து நாளொன்றுக்கு 1,20,000 பேரல்களுக்கும் அதிகமாக டீசலை இறக்குமதி செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இது 2017-ஆம் ஆண்டிற்குப் பிறகான மிக உயர்ந்த மாதாந்திர கொள்முதல் அளவாகும். மேலும், கடந்த ஆண்டில் இந்தியா, துருக்கிக்கு 5,62,421 டன் டீசலை ஏற்றுமதி செய்துள்ளது. இதன்மூலம், ரஷ்யா மற்றும் எகிப்திற்குப் பிறகு துருக்கியின் மூன்றாவது பெரிய விநியோக நாடாக இந்தியா திகழ்கிறது.
உலகின் முன்னணி எண்ணெய் சுத்திகரிப்பு மையங்களில் ஒன்றான இந்தியா, ரஷ்யா மற்றும் பிற நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை வாங்கிச் சுத்திகரித்து ஏற்றுமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், துருக்கியின் டீசல் ஏற்றுமதி இந்தியாவோடு நின்றுவிடவில்லை. Kpler தரவுகளின்படி, அமெரிக்காவும் ஆகஸ்ட் மாதத்தில் ஒருநாளைக்குச் சுமார் 90,000 பீப்பாய்கள் என்ற அளவில் துருக்கிக்கு ஏற்றுமதி செய்து, மாதாந்திர உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. இந்தியாவின் இந்த வர்த்தகம், விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொருட்களை வாங்க விரும்பவருக்கு அதை விற்பதுதானே முறை; அதை எங்கே விற்றால் என்ன என்பதே இந்தியாவின் பதிலாக உள்ளது

