ஈரானுக்குப் பறக்கும் எச்சரிக்கை.. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடிப் பதிவு!
ஈரானில் பொருளாதாரம் மற்றும் விலைவாசி உயர்வு தொடர்பாக டிசம்பர் 28இல் தொடங்கிய போராட்டம், கமேனி ஆட்சி மற்றும் ஊழலுக்கு எதிரான பரந்த போராட்டமாக உருமாறியுள்ளது. போராட்டத்தின்போது ஈரான் அரசால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைல் இதுவரை 6000-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலரை ஈரான் அரசு கைது செய்திருப்பதோடு மட்டுமல்லாமல் உடனடியான மரண தண்டனைகளையும் அறிவித்து வருகிறது.
இந்த நிலையில் தான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை குறித்த மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “மிகப்பெரிய போர்க்கப்பல்கள் அடங்கிய அமெரிக்கக் கடற்படை, ஈரானை நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த கடற்படையை 'ஆபிரகாம் லிங்கன்' என்ற பிரம்மாண்ட விமானம் தாங்கி கப்பல் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்கிறது. இது வெனிசுலாவுக்கு அனுப்பப்பட்ட படையை விட பெரியது. தேவைப்பட்டால் வன்முறை மற்றும் வேகத்துடன் தனது பணியை விரைவாக முடிக்க இந்தப் படை தயாராக இருக்கிறது. ஈரான் உடனடியாகப் பேச்சுவார்த்தைக்கு வந்து, அணு ஆயுதங்கள் இல்லாத ஒரு நியாயமான உடன்படிக்கையைச் செய்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், முன்பு ஒருமுறை ஈரானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டபோது அவர்கள் உடன்படிக்கை செய்யத் தவறியதால், "ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்" மூலம் ஈரானுக்குப் பெரும் அழிவு ஏற்படுத்தப்பட்டதை டிரம்ப் நினைவு கூர்ந்துள்ளார். "அடுத்த தாக்குதல் முன்னதை விட மிகவும் மோசமானதாக இருக்கும்; மீண்டும் அதைச் செய்யத் தூண்டாதீர்கள்" என்றும் அவர் கடுமையாகப் பதிவிட்டுள்ளார்.

