அமெரிக்கா-ஈரான் அணு ஒப்பந்தத்தை காப்பாற்ற ஜெர்மனி முயற்சி
அமெரிக்கா, ஈரான் இடையிலான அணு ஒப்பந்தத்தை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடப் போவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது.
தனது அணு ஆயுத திட்டங்களை குறைத்து கொள்வது தொடர்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுடன் ஈரான் ஒப்பந்தம் மேற்கொண்டது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பின், இந்த ஒப்பந்தத்தை குறை கூறி வருவதுடன், ஈரான் தொடர்ந்து அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்தி வருவதாக குற்றம்சாட்டி வந்தார். அத்துடன் அந்த ஒப்பந்தம் தொடர்பாக ஒரு முடிவுக்கு வந்திருப்பதாக ஐ.நா. சபையில் தெரிவித்தார். இதனால் ஆவேசமடைந்த ஈரான் அதிபர் ஹஸன் ரொகானி, ஒப்பந்தம் ரத்தானால் அமெரிக்காவுக்குத்தான் இழப்பு என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இதனால் இரு நாட்டுக்கும் இடையிலான உறவில் விரிசல் பெரிதாகி வருகிறது. இந்நிலையில் ஒப்பந்தம் ரத்தாகாமல் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடப் போவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது. ஐ.நா. பொது அவை கூட்டத்தில் பேசிய ஜெர்மனிய வெளியுறவு அமைச்சர் சிக்மர் கேப்ரியல், ஒப்பந்தம் ரத்தாவது பிராந்திய பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும் என தெரிவித்தார். எனவே ஒப்பந்தம் ரத்தாகாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளில் ஜெர்மனி தொடர்ந்து ஈடுபடும் என அறிவித்தார்.