
வரும் 8ஆம் தேதி சீனாவிற்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அங்கு வடகொரியாவின் அத்துமீறல்களுக்கு முடிவுகட்டுவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை மறுநாள் முதல் வரும் 10 ஆம் தேதி வரை ட்ரம்ப் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது வடகொரியா உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து சீன அதிபர் ஸீ ஜின்பிங்கை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். ட்ரம்ப் அதிபராக பதவியேற்றப் பின் முதல்முறையாக சீனாவுக்கு செல்லவுள்ளதால் இரு நாட்டுக்கும் இடையே புகைந்து வரும் கசப்பான உணர்வுகள் மறைந்து, உறவுகள் வலுப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் அவரது வருகை குறித்து வாஷிங்டனில் உள்ள அமெரிக்காவுக்கான சீனத் தூதர் குயி தியான்கை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் ட்ரம்பின் பயணத்தால் அமெரிக்கா, சீனா இடையிலான உறவு எதிர்காலத்தில் நேர்மறையான முறைக்கு மாறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.