அலுமினியம், எஃகு வரித் திட்டம் | ட்ரம்ப் போட்ட உத்தரவால் எந்தெந்த நாடுகளுக்கு பாதிப்பு?
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற நாள் முதல் பல அதிரடி உத்தரவுகளில் கையெழுத்திட்டு வருகிறார். அதில் வரி விதிப்பும் ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியத்திற்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அவருடைய முதல் பதவிக்காலத்திலும் இதேபோன்று எஃகு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கு அதிக வரி விதித்திருந்தார். இந்த நிலையில், அவருடைய இரண்டாவது ஆட்சியிலும் இது தொடர்கிறது.
ட்ரம்ப் வரிவிதிப்பு அச்சுறுத்தலுக்குப் பிறகு ஐரோப்பிய மற்றும் ஆசிய இரும்பு உற்பத்தியாளர்களின் பங்குகளும் சரிந்தன. தென் கொரியாவில், தொழில்துறை அமைச்சகம் இரும்பு உற்பத்தியாளர்களை அழைத்து கட்டணங்களின் தாக்கத்தை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து விவாதித்துள்ளது.
எந்த நாட்டிற்கு அதிக பாதிப்பு?
உலகிலேயே எஃகு இறக்குமதியில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்தே ட்ரம்பின் வரி விதிப்பும் அதிகமாக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இந்த வரி விதிப்பு, கனடா மற்றும் மெக்சிகோவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். காரணம், கனடா, பிரேசில் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள்தான் அமெரிக்காவிற்கு எஃகு அல்லது அதுசார்ந்த பொருட்களை வழங்கும் மூன்று முக்கிய நாடுகளாகும். இதற்கு அடுத்த இடங்களில் தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளன.
அதேபோல், கடந்த ஆண்டில், கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு அதிக எஃகு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து 50 சதவிகிதத்திற்கும் மேலாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கனடாவைத் தவிர, ஐக்கிய அரபு அமீரகம், சீனா, கொரியா, பஹ்ரைன், அர்ஜென்டினா மற்றும் இந்தியாவும் அமெரிக்காவிற்கு அலுமினிய பொருட்களை ஏற்றுமதி செய்கின்றன.
இப்படியான சூழலில், ட்ரம்பின் இந்த வரித் திட்டம் கனடாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இரு நாடுகளிலும் வேலை இழப்பை ஏற்படுத்துவதுடன் விலைவாசியும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும், இதனால் சீனா வளர்ச்சி அடையும் எனக் கணிக்கின்றனர். எனினும், இந்த வரியை, உலக நாடுகள் எதிலும் குறைக்கப் போவதில்லை என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ட்ரம்பின் இந்த அறிவிப்புக்கு கனடாவும், ஐரோப்பிய ஒன்றியமும் பதிலடி கொடுத்துள்ளது.
இந்தியாவுக்கு பாதிப்பு இருக்குமா?
ட்ரம்பின் இந்த வரி விதிப்பு கனடாவுக்கே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், இந்தியாவுக்கு அத்தகைய பாதிப்புகள் இருக்காது எனக் கூறப்படுகிறது. காரணம், அந்த அளவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்வதில்லை.
2024இல் இந்தியாவிலிருந்து 200,000 மெட்ரிக் டன் எஃகு பொருட்கள் மட்டுமே அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு, 4 லட்சத்து 71 ஆயிரம் டாலர் மட்டுமே. அதேபோல் கடந்த ஆண்டு, 1 லட்சத்து 60 ஆயிரம் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான அலுமினிய பொருட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு, 440 மில்லியன் டாலர் ஆகும்.
எனினும், ட்ரபின் தற்போதைய வரி விதிப்பு நடவடிக்கைகளால் இந்திய எஃகு மற்றும் அலுமினியத் தொழில்கள் பாதிக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது. ஒருவேளை, மோடியின் அமெரிக்க பயணத்தால் ஏதேனும் மாறுதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.