இந்த நேரத்தில் இது தேவையா?: கோல்ஃப் விளையாடிய ட்ரம்பால் சர்ச்சை!!
அமெரிக்காவில் 16லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும்,ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. உலக அளவில் 54 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் தனக்குச் சொந்தமான க்ளப்பிற்குச் சென்று கோல்ஃப் விளையாடியது விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது. அமெரிக்காவின் விர்ஜினியாவின் ஸ்டெர்லிங் பகுதியில் உள்ள தன்னுடைய க்ளப்பிற்குச் சென்ற ட்ரம்ப், கோல்ஃப் விளையாடி மகிழ்ந்தார். இது பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உயிரிழப்பு லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த பொழுதுபோக்கு தேவைதானா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதேவேளையில் அமெரிக்காவில் நாளை ராணுவ வீரர்களின் நினைவைப் போற்றும் விதமாக பொது விடுமுறையுடன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன அடுத்து வெள்ளை மாளிகையில் பேசிய அதிகாரிகள், இந்த நினைவு தின பொது விடுமுறையில் அமெரிக்கர்கள் வெளியே சென்று நேரம் கழிக்கலாம். கோல்ஃப் விளையாடலாம்.
டென்னிஸ் விளையாடுங்கள், கடற்கரைக்குச் செல்லுங்கள். ஆனால் வெளியில் செல்லும் அனைவரும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஒருவருக்கொருவர் ஆறு அடி இடைவெளியுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்