ஈரானுடனான அணு ஒப்பந்தத்தால் பலன் இல்லை: ட்ரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு
அணு ஒப்பந்தத்துக்கு உட்பட்டு ஈரான் செயல்படவில்லை, ஈரானுடன் செய்து கொண்ட அந்த ஒப்பந்தம் மிகவும் மோசமானது, அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.
தனது அணு ஆயுத திட்டங்களை குறைத்து கொள்வது தொடர்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுடன் ஈரான் ஒப்பந்தம் செய்து கொண்டது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற நாள் முதலாக அந்த ஒப்பந்தத்தின் படி ஈரான் நடந்து கொள்ளவில்லை என குற்றம்சாட்டி வருகிறார். மேலும் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாகவும் தெரிவித்து வருகிறார். மேலும், ஈரானுடன் செய்து கொண்ட அந்த ஒப்பந்தம் மிகவும் மோசமானது, அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை என்று ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இந்தச் சூழலில் அந்த ஒப்பந்தத்தை ட்ரம்ப் அங்கீகரிக்க மறுத்தால் ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.