ட்ரம்பின் ஜாக்பாட் அறிவிப்பு.. கொட்டப்போகும் பணமழை.. என்ன நடக்கிறது அமெரிக்காவில்?
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றி பெற்றால், நாட்டில் உள்ள ஒவ்வொரு வயது வந்த குடிமகனுக்கும் 5,000 டாலர் வழங்கப்படும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
டெக்சாஸ் மாகாணம் டல்லாஸில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் மாநாட்டில் பேசிய ட்ரம்ப், இந்தத் தொகையை ’ட்ரம்ப் டிவிடெண்ட்’ என குறிப்பிட்டார். அமெரிக்காவில் சுமார் 27 கோடி வயது வந்தோர் உள்ள நிலையில், அனைவருக்கும் தலா 5,000 டாலர் வழங்கினால் அரசுக்கு சுமார் 1.3 டிரில்லியன் டாலர் செலவாகும் என கணக்கிடப்படுகிறது.
இந்தத் தொகை எவ்வாறு வழங்கப்படும், அதற்கான பணம் எங்கிருந்து வரும் என்பது குறித்து ட்ரம்ப் எந்த விரிவான விளக்கத்தையும் அளிக்கவில்லை. ஆனால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயை இதற்குப் பயன்படுத்தலாம் என துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கர்களுக்கு வழங்கப்படும் பணம் அமெரிக்காவிலேயே செலவிடப்பட வேண்டும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். ஆனால், அதை அரசு எவ்வாறு கண்காணிக்கும் என்பது தெளிவாகவில்லை.
ட்ரம்பின் இந்த அறிவிப்பை ஜனநாயகக் கட்சியினர் “வெற்று வாக்குறுதி” என விமர்சித்துள்ளனர். இவ்வளவு பெரிய தொகையை வழங்குவது நடைமுறையில் சாத்தியமா என்றும், சட்டப்படி இதைச் செயல்படுத்த முடியுமா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.
அமெரிக்காவில் அரசின் செலவினங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படுகிறது. எனவே, தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றாலும், இந்தத் தொகையை வழங்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டிய சூழல் வரலாம்.
மேலும், தேர்தலைக் கருத்தில் கொண்டு பணம் வழங்குவதாக அறிவிப்பது தொடர்பாக சட்டச் சிக்கல்களும் எழுந்துள்ளன. வாக்காளர்களின் முடிவைப் பாதிக்கும் வகையில் பணம் வழங்குவதை அமெரிக்க சட்டங்கள் தடை செய்கின்றன. ஆனால், இது வரி குறைப்பு அல்லது பொதுவான பொருளாதாரச் சலுகை எனக் கருதப்பட்டால், சட்டப்படி செல்லுபடியாகும் என சில சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கு முன்பும் இறக்குமதி வரி மூலம் கிடைக்கும் வருவாயில் இருந்து அமெரிக்கர்களுக்கு 2,000 டாலர் வழங்குவது குறித்து ட்ரம்ப் பேசியிருந்தார். இந்நிலையில், நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ள இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி இரு அவைகளிலும் வெற்றி பெறுமா என்பதே தற்போது முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

