தடை விதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்காவினுள் நுழைய மீண்டும் அனுமதி: ட்ரம்ப்
90 நாட்களில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை வலுப்படுத்தி, பிறகு தடை விதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்காவினுள் நுழைய மீண்டும் அனுமதி அளிக்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஆறு நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு அகதிகளாக வருபவர்களுக்கு தடை விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார். அகதிகளுடன் சேர்ந்து தீவிரவாதிகளும் ஊடுறுவி விடுவதாக ட்ரம்ப் அரசு கருதுகிறது. எனவே தீவிரவாத அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்காவைக் காப்பாற்ற இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ட்ரம்ப் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். தனது அறிவிப்பு குறித்து விளக்கம் அளித்த ட்ரம்ப், இது இஸ்லாமியர்கள் மீதான தடை என ஊடகங்கள் தவறாக சித்தரிப்பதாக கூறினார். பெரும்பாலும் இஸ்லாமியர்களே வசிக்கும் 40 நாடுகள் இந்த உத்தரவால் பாதிக்கப்படவில்லை எனக் கூறி இருக்கும் ட்ரம்ப், இதனை மதரீதியாகப் பார்க்காமல், நாட்டின் பாதுகாப்பு என்ற அடிப்படையில் பார்க்க வேண்டும் என ட்ரம்ப் கூறினார். 90 நாட்களில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை வலுப்படுத்தி, பிறகு தடை விதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்காவினுள் நுழைய மீண்டும் அனுமதி அளிக்கப்படும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அகதிகள் வருகையால் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள சூழல் அமெரிக்காவிலும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தில்தான் அகதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்களை சுட்டிக்காட்டியிருக்கும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் அது போன்ற ஒரு சூழல் அமெரிக்காவிலும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பதாக கூறியுள்ளனர்.