ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை விதிக்கும் முடிவிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், ரஷ்யா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்க ட்ரம்ப் திடமான ஆதரவு அளித்திருப்பதாக தெரிவித்தார். பொருளாதார தடை விதிப்பதற்கான மசோதாவிற்கு, பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து சென்ட் சபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிபர் கையெழுத்திட்ட பின்னர் அது சட்டமாகிவிடும்.
ஆனால் ரஷ்யாவுடன் நட்புறவை மேற்கொள்ள அதிபர் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்திருந்ததால், இந்த மசோதாவை ட்ரம்ப் ஆதரிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், மசோதாவிற்கு ட்ரம்ப் ஆதரவு தெரிவித்திருக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாகக் கூறி அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பயங்கரவாதத்திற்கு ஈரான் ஆதரவளிப்பதாகவும், அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருவதாகவும் கூறி அந்நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்க திட்டமிட்டுள்ளது.