மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த டிரம்ப் : இந்தியாவிற்கு உயரும் இறக்குமதி வரி?
செய்தியாளர் : வெற்றிச்செல்வி
உலக வர்த்தகச் சந்தையில் மீண்டும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத் தயாராகிவிட்டார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இந்தியா மீது கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. இதன் பின்னணி என்ன? இந்தியாவிற்கு இதனால் என்ன பாதிப்பு?
இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, வியட்நாம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 16 முக்கிய வர்த்தகக் கூட்டாளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.
குறிப்பாக, இந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களால் அமெரிக்க தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுகிறதா? என்பது குறித்து கடந்த மார்ச் 11-ம் தேதி அமெரிக்க வர்த்தகச் சட்டத்தின் Section 301-ன் கீழ் விசாரணையைத் தொடங்கியது. இந்த விசாரணையின் முடிவுகளை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விசாரணையில், சம்பந்தப்பட்ட நாடுகளின் உற்பத்தி அளவு, ஏற்றுமதி மற்றும் அந்தந்த அரசுகள் வழங்கும் மானியங்கள் உள்ளிட்டவற்றை அமெரிக்கா ஆய்வு செய்கிறது. குறிப்பாக, அதிகப்படியான உற்பத்தியும் அரசின் சலுகைகளும் அமெரிக்க நிறுவனங்களின் வர்த்தகத்தைப் பாதிக்கிறதா என்பதைக் கண்டறிவதே இதன் நோக்கம் ஆகும்.
சில நாடுகள் தங்கள் உள்நாட்டு நிறுவனங்களுக்கு மானியங்களும் சலுகைகளும் வழங்குவதால், அவை குறைந்த விலையில் பொருட்களை உற்பத்தி செய்து சர்வதேச சந்தையில் விற்பனை செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. இதனால் அந்த நிறுவனங்களுடன் அமெரிக்க நிறுவனங்களால் போட்டிபோட முடியாமல், உள்நாட்டு வர்த்தகம் பாதிக்கப்படுவதாக ட்ரம்ப் அரசு கூறுகிறது.
இந்த விசாரணையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு 15 முதல் 25 சதவீதம் வரை கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படலாம் என முன்னாள் அமெரிக்க வர்த்தகத்துறை அதிகாரி ஒருவர் மதிப்பிட்டுள்ளார். குறிப்பாக, இந்தியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கு ஒப்பீட்டளவில் அதிக வரிகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், இந்த நாடுகள் தங்கள் நாட்டின் நிறுவனங்களின் அதிகப்படியான உற்பத்தியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் இந்த வரி மேலும் உயரக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்தால், அங்கு அவற்றின் விலை உயர்ந்து, இந்திய ஏற்றுமதியாளர்களின் லாபமும் போட்டித்திறனும் குறைய வாய்ப்புள்ளது. எந்தெந்தப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படுகிறது, எவ்வளவு வரி விதிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே இந்தியாவின் மீதான உண்மையான தாக்கம் தெரியவரும்.
