தோல்வியை ஏற்றுக்கொள்ளாத ட்ரம்ப்.. என்ன நடக்கிறது அமெரிக்காவில்?

தோல்வியை ஏற்றுக்கொள்ளாத ட்ரம்ப்.. என்ன நடக்கிறது அமெரிக்காவில்?
தோல்வியை ஏற்றுக்கொள்ளாத ட்ரம்ப்.. என்ன நடக்கிறது அமெரிக்காவில்?

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுவிட்டதாக நம்பகமான ஊடகங்கள் அறிவித்துவிட்டன. எப்போதும் ட்ரம்பை ஆதரிக்கும் ஃபாக்ஸ் தொலைக்காட்சி கூட ஜோ பைடன் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுவிட்டார் என்று கூறிவிட்டது. குடியரசுக் கட்சியில் உயிருடன் இருக்கும் ஒரேயொரு முன்னாள் அதிபரான ஜார்ஜ் புஷ்ஷும் பைடனுக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டார். அமெரிக்காவின் தேசிய தேர்தல் அதிகாரிகளே எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று கூறிவிட்டார்கள்.

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த சீனாவிடமிருந்தும் ஜோ பைடனுக்கு வாழ்த்துக் கிடைத்துவிட்டது. ஆனாலும் தோல்வியை ஒப்புக் கொள்ள டொனால்ட் ட்ரம்ப் தயாராக இல்லை. நீதிமன்றத்தை நாடவும், மறுவாக்கு எண்ணிக்கை கோருவதுமே ட்ரம்பின் திட்டம். அப்படி எந்தச் சிக்கல் ஏற்பட்டாலும் அது டிசம்பர் மாதம் 8-ஆம் தேதிக்குள் தீர்த்துக் கொள்ளப்படவேண்டும் என்கிறது அமெரிக்க அரசியல் சட்டம்.

அப்படி நடக்கவில்லை என்றால், சிக்கல் ஏற்படும் மாநிலங்களின் சட்டப்பேரவைகள் களத்தில் இறங்கி தேர்தல்சபை உறுப்பினர்களின் பட்டியலை வழங்கும். ட்ரம்ப் குறிவைத்திருப்பது பென்சில்வேனியா, மிச்சிகன், அரிசோனா ஆகிய மாநிலங்கள். இந்த மூன்று மாநிலப் பேரவைகளிலும் அவரது குடியரசுக் கட்சியினரே அதிகம். இந்த வழியில் பைடனுக்கு முட்டுக்கட்டை போடலாம் என ட்ரம்ப் தரப்பு திட்டமிட்டிருக்கிறது.

ஆனால் இவற்றில் இரு மாநிலங்களில் ஜனநாயகக் கட்சியின் ஆளுநர்கள் பதவியில் இருக்கிறார்கள். அவர்களும் அவர்களது விருப்பப்படி தனியாக பட்டியல் ஒன்றை வெளியிடுவார்கள். இப்படி நடந்தால் 2000-ஆவது ஆண்டுத் தேர்தலைவிடவும் மிகக் குழப்பமான தேர்தலாக இது அமைந்துவிடும். குழப்பத்தின் முடிவில்கூட ட்ரம்புக்கு வெற்றி கிடைக்குமா என்பது சந்தேகமே. நீதிமன்றங்களும் அவருக்கு ஆதரவாக இருக்கப் போவதில்லை என்று கணிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com