அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாகும் ஆங்கிலம்.. டிரம்ப் போட்ட உத்தரவு!
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு நிர்வாக மாற்றங்களை கொண்டுவந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் . அந்த வகையில் அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்தை அறிவித்து இருக்கிறார்.
இனி ஒரேமொழி ஆங்கிலம்..
முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் காலத்தில் அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளில் ஆங்கிலம் இல்லாமல் வேறு மொழி பேசுவோருக்கு ஆதரவாக பிற மொழிகளில் கையெழுத்திடவும், செய்திகளை அனுப்பவும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதை தற்போது டிரம்ப் மாற்றியுள்ளார். ஒரே மொழியில் மக்கள் தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் அமெரிக்கா வலுப்பெறும் என டிரம்ப் கூறுகிறார்.
அமெரிக்க அரசு கடந்த 2019ம் ஆண்டு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, அந்நாட்டில் 68 மில்லியன் (6.8 கோடி) மக்கள் தங்களது வீட்டில் ஆங்கிலம் இல்லாமல் பிற மொழிகளை பேசுகிறார்கள். அமெரிக்காவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருந்தாலும் கூட, 40 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் ஸ்பானிஷ் மொழியை பேசுகிறார்கள்.
கடந்த மாதம் டிரம்ப் அதிபராக பதவியேற்ற சில மணி நேரங்களுக்குள், அவரது புதிய நிர்வாகம் அதிகாரப்பூர்வ வெள்ளை மாளிகை வலைத்தளத்தின் ஸ்பானிஷ் மொழி பதிப்பை அகற்றியது.
அமெரிக்க வரலாற்றை எடுத்துக்கொண்டால் கிட்டத்தட்ட 250 ஆண்டுகளாக, அந்நாட்டிற்கு அதிகாரப்பூர்வ மொழி இல்லை. தொடக்கத்தில் ஆங்கிலம் பரவலாகப் பேசப்பட்டது என்றும், அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அதை அதிகாரப்பூர்வ மொழியாக முறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.