ட்ரம்ப்-கிம் ஜாங் உன் சந்திப்பு; ஜப்பான் பிரதமர் வரவேற்பு
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்த முன் வந்ததற்கு, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளார்.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும், தென்கொரிய அதிபர் மூன் ஜேவும் அண்மையில் சந்தித்து பேசிய பன்முன்ஜாம் பகுதியிலேயே ட்ரம்ப் உடனான சந்திப்பு நிகழும் என தகவல் வெளியானது. ஏற்கெனவே அங்கு ஊடக வசதி இருப்பதாலும், வடகொரிய எல்லைப் பகுதிக்கு செல்லும் வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு ட்ரம்புக்கு கிடைக்கவிருப்பதாலும் இந்தச் சந்திப்பு அங்கு நிகழ்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் வரும் ஜூன் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் கிம் ஜாங் உன்-னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக ட்விட்டரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதைத் தொடர்ந்து இந்த சந்திப்புக்கு பல்வேறு நாட்டின் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து சப்போரோவில் செய்தியாளர்களை சந்தித்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, சந்திப்பு வெற்றிகரமாக அமைய தேவையான அனைத்து முயற்சிகளையும் ஜப்பான் எடுக்கும் என தெரிவித்தார்.