ஈரான் மீது கூடுதல் பொருளாதார தடை விதித்த அமெரிக்கா: சர்வதேச அளவில் பொருளாதார பதற்றம்
ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்திருப்பதால், சர்வதேச அளவில் பொருளாதார பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரான் உடனான சர்வதேச அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதில் இருந்தே இரு நாடுகளுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதால் பதற்றம் மேலும் அதிகரித்தது. இதனால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ட்ரம்ப், ஈரான் வளமான நாடாக இருக்க விரும்பினால் அதற்கு தடையில்லை, ஆனால், அணு ஆயுத பலத்தை காட்டுவோம் என ஆணவப் போக்கில் செயல்பட்டால் பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்தார். தற்போது ஈரான் மீது அமெரிக்கா கூடுதல் பொருளாதார தடைகளை விதித்திருப்பதால், சர்வதேச அளவில் பொருளாதார பதற்றம் அதிகரித்துள்ளது.
இதனால் ஈரானுடன் வர்த்தகத் தொடர்பு வைத்துள்ள நாடுகள் கடும் பாதிப்பை சந்திக்கும். ஏற்கெனவே அமெரிக்கா விடுத்த எச்சரிக்கையால் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா உள்ளிட்ட நாடுகள் நிறுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.