“எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிடுங்க..” ட்ரம்பை குறிவைக்கும் மஸ்க்..! மீண்டும் தொடங்கிய பணிப்போர்!
எப்ஸ்டீனுக்கு ஒருபோதும் வாடிக்கையாளர் பட்டியல் இல்லை என்றும், அவர் முக்கிய நபர்களை மிரட்டியிருக்கலாம் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் FBI அறிக்கை கூறியதை அடுத்து, டிரம்ப் நிர்வாகம் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
எலான் மஸ்க் மற்றும் ட்ரம்ப் இடையே அதிகரித்து வரும் மோதலுக்கு மத்தியில் எப்ஸ்டீன் file தொடர்பான பேச்சும் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.
எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிடுங்க..
பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கு கோப்புகளை வெளியிடுமாறு, தனது முன்னாள் நண்பரும் அமெரிக்க அதிபருமான டொனால்ட் டிரம்பிடம், கோடீஸ்வரர் எலான் மஸ்க் கேட்டுள்ளார். எப்ஸ்டீன் தொடர்புடைய கோப்புகள் தொடர்பாக தனது குழு உறுப்பினர்களைத் தாக்குவதை நிறுத்துமாறு, டிரம்ப் தனது ஆதரவாளர்களை வலியுறுத்தியதை அடுத்து இந்த பேச்சுக்கள் எழுந்துள்ளன.
“எப்ஸ்டீனைப் பற்றிப் பேசுறதை நிறுத்துங்கள் என எல்லாரிடமும் டொனால்ட் டிரம்ப் சொல்லிக்கொண்டு இருக்கிறார். அவர் வாக்குறுதி கொடுத்ததது போல கோப்புகளை வெளியிடுங்கள்" என்று எக்ஸ் பக்கத்தில் மஸ்க் பேசியிருக்கிறார்.
இந்த வாரம் justice Department மற்றும் the Federal Bureau of Investigation (FBI) வெளியிட்ட ஒரு குறிப்பில், எப்ஸ்டீனுக்கு ஒருபோதும் வாடிக்கையாளர் பட்டியல் இல்லை என்றும், அவர் முக்கிய நபர்களை மிரட்டியிருக்கலாம் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறி இருந்தது. இதை தொடர்ந்து டிரம்ப் நிர்வாகம் ஆதரவாளர்களிடமிருந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறது. எப்ஸ்டீன் தனது சிறை அறையில் தற்கொலை செய்து கொண்டதாகவும் அறிக்கை முடிவு செய்துள்ளது.
என்ன நடந்தது?
2024 ஆம் ஆண்டு தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, டொனால்ட் டிரம்ப் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கு கோப்புகளை பகிரங்கப்படுத்துவதாக உறுதியளித்திருந்தார்.
மஸ்கின் பேச்சுக்கு எக்ஸ் தளத்தில் பதிலளிக்கும் விதமாக, ட்ரம்ப் கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் பேசுகையில், “நம் நிர்வாகம் சிறப்பானது, உலகமே பேசும் நிர்வாகம். ஆனால் சில சுயநலவாதிகள் இதை சேதப்படுத்த முயற்சிக்கிறார்கள். எப்போதுமே இது எப்ஸ்டீன் பற்றிதான். என்னை தாக்க FAKE ஹிலரி கிளிண்டன் / ஸ்டீல் டொசியரை உருவாக்கியது போலவே, எப்ஸ்டீன் குறித்தும் தற்போது பேசி வருகிறார்கள்.
இப்போது என் நண்பர்கள் போல நடிக்கும் சிலர் கூட இதை நம்புகிறார்கள். உண்மையிலேயே எப்ஸ்டீன் கோப்புகளில் ஏதும் இருந்திருந்தால், ஏன் அதைக் கண்டுபிடிக்கவில்லை? AMERICA-வை மீண்டும் சிறப்பாக்குகிறோம். எப்ஸ்டீன் பற்றி பேசுவதை நிறுத்துங்கள். இது முக்கியமல்ல. நம் நாட்டை காப்பாற்றுங்கள்” என கூறியிருக்கிறார்.