தோல்வியை ஒப்புக்கொண்ட ட்ரம்ப்... இந்த 'திடீர்' மாற்றத்தின் பின்னணி!

தோல்வியை ஒப்புக்கொண்ட ட்ரம்ப்... இந்த 'திடீர்' மாற்றத்தின் பின்னணி!
தோல்வியை ஒப்புக்கொண்ட ட்ரம்ப்... இந்த 'திடீர்' மாற்றத்தின் பின்னணி!

நீண்ட இழுபறிக்கு பிறகு வெள்ளை மாளிகை நிர்வாகத்தை ஜோ பைடன் அணியினரிடம் ஒப்படைக்க டொனால்டு ட்ரம்ப் சம்மதித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஜோ பைடன் வெற்றிபெற்றுவிட்டார் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால், இந்த முடிவுகளை டொனால்டு ட்ரம்ப் ஏற்க தயாராக இல்லை. ஜோ பைடன் வெற்றியை நம்பகமான ஊடகங்கள் உறுதி செய்து அறிவித்தன. ட்ரம்பை ஆதரிக்கும் ஃபாக்ஸ் தொலைக்காட்சி கூட ஜோ பைடன் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுவிட்டார் என்று அறிவித்துவிட்டது. ஏன், அதைவிட அமெரிக்காவின் தேசிய தேர்தல் அதிகாரிகளே எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று கூறிவிட்டனர். ஆனாலும், ட்ரம்ப் மட்டும் அதை ஏற்காமல் இருந்து வந்தார்.

கடந்த 15-ம் தேதி பைடன் தேர்தலில் வெற்றிபெற்றதாக முதன்முறையாக ட்ரம்ப் ஒப்புக்கொண்டு ட்வீட் போட்டார். ஆனால், சில மணிநேரங்களில் அதனை நீக்கி நான் ஒப்புக்கொள்ளவில்லை என்று பல்டி அடித்தார். போதாக்குறைக்கு, குடியரசு கட்சியினர் சில மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடத்தியதாக கூறி வழக்கு தொடுத்தார். இதனால் குழப்பம் நீடித்து வந்தது.

இந்த நிலையில் தற்போது ஜோ பைடனுக்கு, முறையாக ஆட்சி அதிகார மாற்றம் செய்ய சம்மதித்து அதற்கான பூர்வாங்க பணிகளை செய்ய உத்தரவிட்டிருக்கிறார் ட்ரம்ப். இது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டு வருகிறது.

வழக்கமாக, அதிபர் தேர்தலில் வென்றவர்கள் அதிபராக முறைப்படி பதவியேற்க அமெரிக்காவின் ஜெனரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (GSA) எனும் அரசு அமைப்பு உதவும். இந்த அமைப்புதான் அதற்கான பணிகளை செய்யும். இந்த அமைப்பை தான் பைடன் அதிபராக பதவியேற்க பணிகளை செய்யும் உத்தரவிட்டுள்ளதாக ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

அதில், "பொது நிர்வாக அதிகாரி எமிலி மர்பிக்கும் அவரின் பணிகளுக்கும், நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எமிலிக்கு நெருக்கடி கொடுத்து, துன்புறுத்தினார்கள். அது இனியும் தொடரக் கூடாது. எங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயத்திற்காகத் தொடர்ந்து போராடுவோம். எங்கள் வழக்கு வலுவாக தொடர்கிறது, நாங்கள் நல்ல சண்டையைத் தொடருவோம், நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நான் நம்புகிறேன்.

எனினும், நாட்டின் நலனை கருத்தில்கொண்டு நிர்வாகத்தை மாற்றிக் கொடுக்க தேவையான பணிகளைச் செய்யுமாறு எமிலி மர்பி டீமுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவழியாக வெள்ளை மாளிகை நிர்வாகத்தை ஜோ பிடன் அணியினரிடம் ஒப்படைக்க ட்ரம்ப் சம்மதித்துள்ளது அமெரிக்காவில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, இந்த ஜெனரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பு, பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதாக முதலில் அறிவித்தது. ஆனால், ட்ரம்பால் நியமிக்கப்பட்ட இந்த அமைப்பின் நிர்வாகிகள் ஜோ பைடனை வெற்றியாளராக உறுதிப்படுத்தாமல் இருந்தனர். அதில், எமிலி மர்பியும் ஒருவர்.

எமிலி மர்பி ட்ரம்ப்பால் நியமிக்கப்பட்டவர். இதனால் சர்ச்சை எழுந்த நிலையில் தற்போது ட்ரம்ப் நிர்வாக மாற்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார். ட்ரம்ப்பின் மனமாற்றத்தை ஜோ பைடன் அணியினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து அவர்கள், ``கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், பழைய பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் இன்று ட்ரம்ப் எடுத்திருக்கும் முடிவுகள் அவசியமான ஒன்று" என்று கூறியுள்ளனர்.

ட்ரம்ப் முடிவின் பின்னணி!

சில மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் இருந்ததாக ட்ரம்ப் தரப்பு குற்றம் சாட்டியிருந்தது. பென்சில்வேனியா, ஜார்ஜியா என ட்ரம்ப் தரப்பு முறைகேடு நடந்ததாக சொல்லப்பட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் ஜோ பைடன் முன்னிலை பெற்றார்.

கடைசியாக மிச்சிகன் மாகாணத்திலும் பைடன் அதிக வாக்குகள் பெற்றதாக நேற்று (நவ.23) அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்தே தனது மனநிலையை மாற்றிக்கொண்டு, ட்ரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு நிர்வாக மாற்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com