வடகொரியாவுக்கு எண்ணெய் அனுப்பிய சீனா: ட்ரம்ப் குற்றச்சாட்டு
ஐ.நா.வின் தடையை மீறி வடகொரியாவுக்கு சீனா எண்ணெய் ஏற்றுமதி செய்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், சீனா கையும் களவுமாக பிடிபட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். வடகொரியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதியை அனுமதித்து சீனா பெருத்த ஏமாற்றத்தை அளித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதே நிலை தொடர்ந்தால் வடகொரியா பிரச்னைக்கு எந்தத் தீர்வையும் எட்ட முடியாது என்றும் அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக வடகொரியாவின் கப்பலில் எண்ணெய் ஏற்றுமதி செய்யவில்லை என சீனா மறுப்பு தெரிவித்திருந்தது. மேலும் வடகொரியா மீது கடந்த வாரம் ஐ.நா. விதித்திருந்த புதிய தடைகளையும் சீனா வரவேற்றிருந்தது. இந்தச் சூழலில் வடகொரியாவுக்கு உதவும் வகையில் சீனா நடந்துக் கொண்டிருப்பது உலக நாடுகளை அதிருப்தி அடைய வைத்துள்ளது.