பட்டுப்பாதை: சீனாவுக்கு எதிராக இந்தியா.. புதிய பொருளாதார வழித்தடத் திட்டம் அறிமுகம்!

சீனாவின் பட்டுப் பாதைக்கு நிகராக, இந்தியாவுடன் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் வகையில் புதிய பொருளாதார வழித்தடத்துக்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சீனா, இந்தியா
சீனா, இந்தியாட்விட்டர்

வணிகத்துக்காக சீனா உருவாக்கிய ‘பட்டுப்பாதை’! 

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஜி20 உச்சி மாநாட்டில், சீனா அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் கலந்துகொள்ளாதது உலக நாடுகளைக் கவலைகொள்ளச் செய்தது. எனினும், இதற்குப் பின் அரசியல் இருப்பதாகப் பேசப்பட்டது. இதனிடையே சீன அரசு, புதிய பட்டுப்பாதை திட்டத்தைக் கையில் எடுத்து செயல்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அதாவது, பட்டு உற்பத்தியில் புகழ்பெற்றுத் திகழ்ந்த சீனா, அதன் வணிகத்துக்காக உருவாக்கிய பண்டையகால வழியே, பட்டுப் பாதை ஆகும். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தப் பட்டுப் பாதை, அமெரிக்கா உலக வல்லரசாகிய பின், 1500ஆம் ஆண்டுவாக்கில், பட்டுப் பாதை நொடித்துப் போனதாகக் கூறப்படுகிறது.

new silk road
new silk roadட்விட்டர்

நவீன தடத்தை உருவாக்கும் சீனா!

இந்த நிலையில்தான் அதேபோன்று ஒரு நவீன தடத்தை உருவாக்க, தற்போது சீனா முயன்று வருகிறது. சீனா இந்த திட்டத்தை 2008-இல் தொடங்கியது. மேலும் இதன்கீழ் பல நாடுகளில் பணிகள் நடந்து வருகின்றன. அனைத்து நாடுகளுக்கும் பயனளிக்கும் விதத்தில் இந்தப் பட்டுப் பாதை திட்டத்தைச் செயல்படுத்துவதாக சீனா சொல்கிறது. சீனாவின் பட்டுப் பாதை ஒப்பந்தங்களில் சில ஆசிய நாடுகள் கையெழுத்திட்டபோதும், பல நாடுகள் ஆர்வத்துடன் முன்வரவில்லை. ஆனால் இதில் சீனாவின் மிகப்பெரிய அரசியலும், சுயநலமும் இருப்பதாக உலக வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

ஆர்வம் காட்டாத இந்தியா!

ஆனால், இவை அனைத்தையும் மறுக்கும் சீனா, அதைச் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. சீனாவின் பட்டுப் பாதை ஒப்பந்தங்களில் சில ஆசிய நாடுகள் (பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு) கையெழுத்திட்டபோதும், பல நாடுகள் ஆர்வத்துடன் முன்வரவில்லை. இதில் இருந்து விலகியிருக்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள், சீனாவின் இந்தத் திட்டத்தை பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. மாறாக, ஆசியப் பிராந்தியத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அதிலும் குறிப்பாக, இந்தியப் பெருங்கடலைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகக் கருதுகின்றன.

ஜி20 மாநாட்டுத் தலைவர்கள்
ஜி20 மாநாட்டுத் தலைவர்கள்ட்விட்டர்

சீனாவுக்கு பதிலடி தரும் புதிய பொருளாதார வழித்தடத்துக்கான திட்டம்!

இந்தச் சூழலில்தான் தற்போது டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின்போது, இந்தியாவுடன் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் வகையில் புதிய பொருளாதார வழித்தடத்துக்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத மிகப் பெரிய அடிப்படை கட்டமைப்பு திட்டமாகும். இதன்மூலம் வர்த்தகம், எரிசக்தி மற்றும் டிஜிட்டல் தகவல் தொடர்புகள் வளர்ச்சி பெறும். இதை இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய யூனியன், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் தொடங்கவுள்ளன. குறிப்பாக, இந்த திட்டம் சீனாவின் பட்டுப்பாதை முயற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருக்கும் எனக் கருதப்படுகிறது. அதேநேரத்தில், இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பிறகு, இந்தியாவின் வர்த்தகத்தில் பெரிய ஏற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

”வளர்ச்சிக்கு புதிய வேகத்தை வழங்கும்”!

இதுகுறித்து பிரதமர் மோடி, “இனிவரும் காலங்களில், இந்தியா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே பொருளாதார ஒருங்கிணைப்பின் முக்கிய வழித்தடமாக இத்திட்டம் இருக்கும். இந்த புதிய வர்த்தக பாதை சர்வதேச இணைப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கு புதிய வேகத்தை வழங்கும். இத்திட்டம் மூலம் இந்தியாவை மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா உடன் நெருங்கி இணைத்துள்ளது” என அறிவித்தார்.

ஜோ பைடன், மோடி
ஜோ பைடன், மோடிட்விட்டர்

”மத்திய கிழக்கில் செழிப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தம்”!

இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “இது மத்திய கிழக்கில் செழிப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தம். இது, இரண்டு கண்டங்களின் துறைமுகங்களை இணைப்பதன் மூலம் மத்திய கிழக்கில் அதிக செழிப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் மிகப்பெரிய ஒப்பந்தம்” எனத் தெரிவித்துள்ளார்.

உலகின் பல்வேறு தலைவர்களும் இதை வரவேற்றுள்ள நிலையில், சீனா இத்திட்டத்தை விமர்சித்துள்ளது. எனினும், இந்த விஷயத்தில் சீனா அடுத்து என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com