லண்டனில் உள்ள ஏல நிறுவனம் ஒன்றில் திப்பு சுல்தான் பயன்படுத்திய கலைப்பொருட்கள் ரூ.97.32 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.
மைசூர் பேரரசை, 1782 ஆம் ஆண்டில் இருந்து 1799 ஆம் ஆண்டு வரை ஆண்ட மன்னர் திப்பு சுல்தான். ஆங்கிலேயர்களுக்கு சவாலாக இருந்த இருந்தவர். 1799 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக நடந்த போரில் உயிரிழந்தார். ஆங்கிலேய அதிகாரி மேஜர் தாமஸ் ஹார்ட் என்பவர், இந்த வெற்றியின் நினைவாக திப்பு பயன்படுத்திய 8 கலைப்பொருட்களை இங்கிலாந்துக்கு எடுத்து சென்றார்.
இந்நிலையில், இங்கிலாந்தின் பெர்க்ஷைரை (Berkshire) சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஜனவரி மாதம் தங்களது பழமையான வீட்டைச் சுத்தம் செய்தனர். அப்போது திப்பு சுல்தான் பயன்படுத்திய போர் கருவிகள் அவர்கள் வீட்டில் இருந்தது தெரியவந்தது. தங்க கவசத்தால் ஆன வாள், துப்பாக்கி உட்பட 8 அரிய கலைப்பொருட்கள் அதில் இருந்தன.
சுமார் 220 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட அவற்றை அந்த குடும்பத்தினர், இங்கிலாந்தில் கலைப்பொருட்களை ஏலம் விடும் ஆண்டனி கிரிப் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் வழங்கினர். திருட்டுக் கலைப்பொருட்களைக் கண்டுபிடித்து மீட்க உதவும் தன்னார்வ அமைப்பான ‘இந்தி யா பிரைட் புராஜக்ட்’ என்ற அமைப்பு, இதுபற்றி இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்துக்குத் தெரியப்படுத்தியது. இதையடுத்து, ஏலத்தை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதையும் தாண்டி, அந்தப் பொருட்கள் ஏலம் விடப்பட்டன. வெள்ளி தகடு பதிக்கப்பட்ட துப்பாக்கி, ரூ.54 லட்சத்து 57ஆயிரத்துக்கு ஏலம் போனது. தங்கத்திலான பிடியைக் கொண்ட திப்பு சுல்தானின் பிரத்யேக வாள், 16 லட்சத்து 80 ஆயிரத்துக்கு ஏலத்தில் சென்றது. திப்பு சுல்தானின் பொருட்கள் மொத்தம் ஒரு லட்சத்து ஏழாயிரம் பவுண்டுக்கு ஏலம் போனது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.97 லட்சத்து 32 ஆயிரம்.
ஏலத்துக்கு வந்த பொருட்களில் உள்ள ஒரு வாளில் தங்கத்தால் ஆன ஹைதர் அலியின் சின்னம் இடம்பெற்றுள்ளது. எனவே, இது திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலிக்கு சொந்தமானதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.