மியான்மர் | ஆங் சான் சூகி இல்லத்தை ஏலம்விட முயன்ற அரசு.. 3வது முறையாக தோல்வி!
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி, கடந்த 2020-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். எனினும், தேர்தலில் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, கடந்த 2021ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் அந்த நாட்டு ராணுவம் அவரது ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றியது. இதையடுத்து, ஆங் சான் சூகியையும் ராணுவம் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தது. இதனால் அங்கு மீண்டும் ராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்டது.
இதற்கிடையே, ஆங் சான் சூகி மீது ராணுவத்துக்கு எதிரான கிளர்ச்சி, ஊழல் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அந்நாட்டு, நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றுள் சில வழக்குகளில் அவருக்கு இதுவரை 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, மியான்மரில் கடுமையான நிதி நெருக்கடி நிலவிவரும் நிலையில், ஆங் சான் சூகிக்குச் சொந்தமான சொத்துகளை ராணுவம் விற்று பொருளாதார இழப்பை சரிகட்டி வருகிறது. அந்த வகையில், ராணுவ நெருக்கடி நிலையின்போது ஆங் சான் சூகியின் இல்லத்தைக் கையகப்படுத்தி அதை ஏலத்தில் விற்பனை செய்ய அரசு முயன்று வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இதேபோன்று ஏலம் நடைபெற்றது. ஆனாலும் அது தோல்வியிலேயே முடிந்தது. இதையடுத்து நேற்றும் மூன்றாவது முறையாக அவரது வீடு ஏலம் விடப்பட்டது. மியான்மரின் யாங்கூன் பகுதியில் சுமார் 0.8 ஹெக்டேர் நிலத்தைக் கொண்ட இரண்டு மாடிகள் கொண்டு சூகியின் வீடு, குறைந்தபட்சம் $140 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.1,225 கோடி) விலைக்கு ஏலம் விடப்பட்டது. ஆனால், இவ்வளவு குறைந்த தொகைக்கு ஏலம் விடப்பட்டும் யாரும் அதை வாங்க முன்வரவில்லை. இதையடுத்து மூன்றாவது முறையாக அரசின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
மியான்மர் வரலாற்றில் சிறப்பு வாய்ந்த நினைவு சின்னமாக கருதப்படும் அந்த குட்டி பங்களா, யாங்கூனில் உள்ள இனியே ஏரிக்கரையில் கட்டப்பட்டுள்ளது. அந்த வீடுதான் ஆங் சான் சூகியை, 15 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டு அறவழியில் போராட வழிவகுத்தது. அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், ஐ.நா சபை முன்னாள் பொதுச்செயலாளர் பான்-கி-மூன் முதலியவர்கள் அந்த வீட்டில் வைத்துதான் ஆங் சான் சூகியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.