ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் : இஸ்ரேல் ஆதரவும்.. பாலஸ்தீனியர்கள் எதிர்ப்பும்..
இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இஸ்ரேலின் புதிய தலைநகராக ஜெருசலேமை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு அங்கீகரித்தார். இதைத்தொடர்ந்து அமெரிக்க தூதரகம் டெல் அவிவிலிருந்து ஜெருசலேமிற்கு மாற்றப்பட உள்ளது. இன்று நடைபெறும் தூதரக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவான்கா, அதிபரின் மூத்த ஆலோசகரும் மருமகனுமான ஜேர்டு குஷ்னர், நிதித்துறை அமைச்சர் ஸ்டீவன் நுச்சின் ஆகியோரும் ஜெருசலேம் வந்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை இஸ்ரேலிய அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
மற்றொருபுறம் அமெரிக்க தூதரகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு கரை மற்றும் காசா முனை பகுதிகளில் பாலஸ்தீனியர்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர். அசம்பாவிதங்களை தடுக்க 2 ஆயிரம் போலீசாரை அப்பகுதிகளில் இஸ்ரேல் குவித்துள்ளது. ஜெருசலேமில் தூதரகம் திறக்க எதிர்ப்பு தெரிவித்து சிரியாவின் டமாஸ்கஸில் போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் பாலஸ்தீன கொடியையும், அமெரிக்காவிற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
இதற்கிடையில் அமெரிக்காவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் புனிதப்போர் நடத்த வேண்டும் என அல் கய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி தெரிவித்துள்ளார். டெல் அவிவ் - இஸ்லாமியர்களின் பூமி என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள காணொலி பதிவில் ஜவாஹிரி இவ்வாறு கூறியுள்ளார்.