\
The world's longest undersea highway tunnel in china
சீனாஎக்ஸ் தளம்

கடலுக்கடியில் உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை.. புதிய மைல்கல்லைத் தொட்ட சீனா!

கடலுக்கடியில் உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையை சீனா அமைத்திருப்பது உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது.
Published on

கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள கிங்டாவோ (Qingdao) நகரில்தான் இந்தச் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுரங்கப்பாதை திட்டத்தின் ஒட்டுமொத்த நீளம் 17.48 கிலோமீட்டர் ஆகும். இதில் 9.95 கிலோ மீட்டர் நீளமுள்ள பகுதி நேரடியாகக் கடலுக்கடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுரங்கப்பாதையில் வாகனங்கள் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இது, கிங்டாவோவின் முக்கிய நகர்ப்புறப் பகுதிக்கும், அதன் மேற்குக் கடற்கரை புதிய மாவட்டத்திற்கும் (Huangdao) இடையேயான பயண நேரத்தை இது வெறும் 15 நிமிடங்களாகக் குறைக்கும்.

ஜியாசோவ் வளைகுடாவின் இருபுறமும் உள்ள பகுதிகளின் இணைப்பை மேம்படுத்துவதன் மூலம், போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைந்து, வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி வலுவடையும் எனக் கூறப்படுகிறது. இத்திட்டத்தின் முக்கிய கவச சுரங்கப்பாதை தோண்டும் பணிகள் (Main shield tunneling) ஜூலை 14, 2026 அன்று வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. மேலும், இந்தச் சுரங்கப்பாதை பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு 2027 டிசம்பர் வாக்கில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முழுமையாகத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, சீனா 'தைஹூ' (Lake Taihu) ஏரியின் அடியில் 10.79 கி.மீ நீளமுள்ள நீருக்கடியிலான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை கடந்த 2021ஆம் ஆண்டு அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com