சிக்னலில் நிற்காமல் சென்ற பெண்: சந்தேகத்தில் சுட்டு வீழ்த்திய போலீசார்
பிரேசில் நாட்டில் சிக்னலில் வாகனத்தை நிறுத்தாமல் சென்ற ஸ்பெயின் சுற்றுலா பயணியை காவல்துறையினர் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள ரோசின்ஹா குடிசைப் பகுதியில்,போதை கடத்தல் கும்பல்களுக்கு இடையே நடக்கும் மோதல்களால் அங்கு தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த பிரேசில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த குடிசைப் பகுதி வழியாக 67 வயது பெண்மணி மரியா கார் ஓட்டி சென்றுள்ளார். அப்போது மரியா அங்குள்ள சிக்னலில் காரை நிறுத்தாமல் சென்றார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், இவர் போதை கும்பலை சேர்ந்தவராக இருக்கக் கூடும் என கருதி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மரியா பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்பு நடத்தப்பட்ட விசாரணையின் போது அவர் ஸ்பெயினில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணி என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து பிரேசில் காவல்துறை உயர்நிலை விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட்டுள்ளது.