ஒரு மாதமாக ஊதியமின்றி பணியாற்றும் அமெரிக்க அரசு ஊழியர்கள்
அரசு செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் உடன்பாடு எட்டப்படாததால் அமெரிக்காவில் ஒரு மாதத்திற்கு மேலாக அரசு பணிகள் முடங்கி உள்ளன.
அமெரிக்கா - மெக்சிகோ இடையேயான எல்லை 3 ஆயிரத்து 145 கிலோமீட்டர் நீளம் கொண்டது. எல்லையில் ஏற்கனவே தடுப்புகள் அமைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. எனினும் நூற்றுக்கணக்கான அகதிகள் தடுப்புகளை தாண்டி அமெரிக்காவினுள் சட்டவிரோதமாக நுழைவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் மெக்சிகோ எல்லை வழியே அகதிகள் என்ற பெயரில் சமூக விரோதிகள் நாட்டினுள் நுழைவதை தடுக்க எல்லையில் சுவர் எழுப்பப்படும் என ட்ரம்ப் தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். பதவியேற்றது முதலே அகதிகள் நாட்டினுள் நுழைவதையும் குடியேற்றம் பெறுவதற்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்தார். மேலும் எல்லையில் சுவர் கட்டும் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து ட்ரம்ப் முன்னெடுத்து வருகிறார்.
இதற்காக குடியரசுக் கட்சியினர் கொண்டு வந்த சுவர் எழுப்பும் மசோதா செனட் அவையில் தோல்வியில் முடிந்தது. இதனால் அமெரிக்க அரசு பணிகள் பகுதியளவு முடங்கியுள்ளன. ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் 34 நாட்களாக ஊதியமின்றி பணியாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா - மெக்சிகோ எல்லை வழியே சட்டவிரோதமாக அகதிகள் நாட்டினுள் நுழைவதை தடுக்க சுவர் எழுப்ப வேண்டும் அதற்காக அமெரிக்காவே நிதி ஒதுக்க வேண்டும் என அதிபர் ட்ரம்ப் கூறி வருகிறார். ஆனால் சுவர் எழுப்பும் திட்டத்தை தவிர்த்து அரசின் மற்ற செலவினங்களுக்காக நிதி ஒதுக்கி பிரதிநிதிகள் அவை மசோதாவை நிறைவேற்றியது.
ஆனால் ட்ரம்ப் இதனை ஏற்க மறுத்ததால 34 நாட்களாக அமெரிக்க அரசு பணிகள் பகுதியளவு முடங்கியுள்ளன. இந்தச் சூழலில் நேற்று கொண்டு வரப்பட்ட இரண்டு மசோதாக்களும் தோல்வியில் முடிந்ததால் அரசு பணிகள் முடக்கிபோய் உள்ளன. அரசு பணிகள் முடக்கம் காரணமாக அமெரிக்காவில் அரசு ஊழியர்கள் ஊதியமின்றி பணியாற்றுகின்றனர்.