சீனா அடித்த அடி.. பணிந்த அமெரிக்கா.. ட்ரம்ப் எடுத்த ஆயுதம்! பின்னணிஎன்ன?
டிரம்ப்-ஜி ஜின் பிங் சந்திப்பு வர்த்தக போரின் பின்னணியில் முக்கியத்துவம் பெற்றது. சீனாவுக்கு அமெரிக்கா 100% வரி விதித்ததைத் தொடர்ந்து, சீனா பதிலடி கொடுத்தது. இதனால் அமெரிக்கா சீனாவுடன் வரி குறைப்பில் ஒப்பந்தம் செய்தது. ரஷ்யா-உக்ரைன் போரின் முடிவுக்காக டிரம்ப் பல முயற்சிகளை மேற்கொண்டாலும், சீனாவின் பதிலடி அமெரிக்காவை பணிய வைத்தது.
தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசியா - பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துக்கொள்ள வந்த இடத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜிங் பிங்கின் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பு பல்வேறு நாடுகளால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. ஏனென்றால் இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வந்த கடும் வர்த்தக போரால் கவனம்பெற்றது.
மேலும், இந்த சந்திப்பு அமெரிக்கா, சீனாவிற்கு மட்டும் முக்கியமானதாக இல்லாமல், உலக நாடுகள் அனைத்துக்குமே ஏதோ ஒரு விதத்தில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, சீன அதிபரை சந்திக்கும் முதல் சந்திப்பாக இது இருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர மற்றும் கூடுதல் வரி விதிப்பால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதில் டிரம்ப்பின் வரி விதிப்பு குண்டு சீனா மீது அதிகளவில் பாய்ந்தது. இந்தியாவுக்கு 50 சதவீத வரி என்றால் சீனாவுக்கு 100 சதவீத வரி என்ற கணக்கில் வரி விதித்து அதிரடி காட்டினார் டிரம்ப். ஆனால் அதற்கு சற்றும் சளைக்காமல் சீனா பதிலடி கொடுத்தது. குறிப்பாக அறிய வகை கனிமவளங்கள் மீதான வரியை சீனா உயர்த்தியதால் அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்து சீனா மீது கூடுதலாக 100 சதவீத வரியை உயர்த்தி நவம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்தது. அதே போல், சோயா பீன்ஸை அமெரிக்காவிடம் இருந்து சீனா வாங்குவதை குறைந்துள்ளதால் அமெரிக்காவின் சோயா பீன் வர்த்தகம் பெரும் பாதிப்படைந்ததாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க பொருளாதாரத்தை கொண்டு தான் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் இயங்கி வருகிறது. அதனால், அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக போர் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை பாதிக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. இந்த வர்த்தக போர் நடைபெறுவதற்கு முக்கிய காரணம் ரஷ்யா - உக்ரைனின் மூன்றரை ஆண்டுகால போர் தான்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் டிரம்ப் கையிலெடுத்த முதல் ஆயுதம் தான். பொருளாதார தடை.. ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர நடந்த பேச்சுவார்த்தைகள் உடன்பாடு எட்டப்படாததை அடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துநெருக்கடியை ஏற்படுத்தினார். இதன்மூலம் ரஷ்யாவுக்கு தேவையான உணவுகள் தட்டுப்பாடு ஏற்பட்டு போர் நிறுத்தம் ஏற்படும் என்று எதிர்பார்த்த டிரம்ப்புக்கு பேரதிர்ச்சி கொடுத்தது ரஷ்யா. அமெரிக்காவின் அந்த நடவடிக்கையை துச்சமென நினைத்து உக்ரைன் மீதான படையெடுப்பை தீவிரப்படுத்தியது. அதனைத்தொடர்ந்து, ரஷ்யாவுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் விதமாக உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுபியதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டுவதாக டிரம்ப் எடுத்த ஆயுதம், ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளின் உறவுகளை முறிப்பது தான். அதனடிப்படையிலேயே, அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது வரி விதித்தார். அதன் பின்னரும் இந்தியா மற்றும் சீனா ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்கிய பிறகே அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை அதிகரித்தது. அதே சமயத்தில் இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டது என்று பல முறை கூறி இந்தியா - ரஷ்யா இடையேயான உறவில் விரிசல் ஏற்படுத்த அமெரிக்கா முயன்றதாக புவிசார் அரசியல் வல்லுநர்களால் சொல்லப்பட்டது. அதனை தொடர்ந்து, ரஷ்யாவின் பெரும் எண்ணெய் நிறுவனங்கள் மீதும் சம்பீத்தில் அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததும் குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கையில், மூன்றாவதாக அதிபர் டிரம்ப் கையிலெடுத்த ஆயுதம் தான், Tomahawk.. அதாவது, வார்த்தைகளால் பயம் காட்டி ரஷ்யாவை தன் வழிக்கு கொண்டுவந்து விடலாம் என்று அதிபர் டிரம்ப் நினைத்தார். அதன்படி, Tomahawk ஏவுகணையை உக்ரைன் தன்னிடம் கேட்டதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக ரஷ்யா போரை நிறுத்தவில்லை என்றால் இது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். அதன் பின்னரே, ரஷ்யா அணுஆயுத பயிற்சி, Burevestnik மற்றும் Poseidon Super Torpedo ஏவுகணை சோதனை என தொடர்ந்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அதாவது, ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இப்படி பல்வேறு முயற்சிகளை அமெரிக்கா நேரடியாகவும் மறைமுகமாகவும் எடுத்து வரும் நிலையில் அதற்கு ரஷ்யாவும் அணுஆயுத சோதனை, அதன் நட்பு நாடுகளுடனான உறவை எந்தவொரு பாதிப்புமின்றி கடைபிடித்தல் மற்றும் அந்நாட்டுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு சலுகை அளித்தல் என மேற்கத்திய நாடுகளின் அழுத்தங்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
அதிபர் டிரம்ப்பின் இந்த நடவடிக்கையால், இந்தியா -சீனா உறவு மீண்டும் மலர்ந்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சனையை தொடர்ந்து ஏற்பட்ட விரிசல் தற்போது ஒன்றுபட்டுள்ளது. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட இந்தியா - சீனா வான்வழி விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்தவேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் அதிபர் டிரம்ப் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் சீனாவின் பதிலடியால் அமெரிக்கா சற்று பணிந்து விட்டது என்பது போல் தான் தெரிகிறது. ஏனென்றால் அதிபர் ஜி ஜின் பிங் உடனான சந்திப்பின் போது, சீனா மீது விதிக்கப்பட்ட வரியில் 10 சதவீதம் குறைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்த சந்திப்பு குறித்து பேசிய டிரம்ப், சீனாவுடன் எப்போதும் சிறந்த உறவை கொண்டுள்ளோம். ஜி ஜின்பிங் ஒரு சிறந்த தலைவர் என்று புகழாரம் சூட்டி சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக குறைக்கப்படும் என்று கூறினார். அதனை தொடர்ந்து பேசிய சீன அதிபர், டிரம்ப்பின் அறிவிப்பை வரவேற்று, சீனா உடனடியாக அமெரிக்காவிலிருந்து சோயாபீன்ஸ் வாங்கத் தொடங்கும். மிகப்பெரிய பிரச்சினையாக இருந்த அரிய வகை தனிமங்கள் ஏற்றுமதி பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டது. இனி சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு அரிய வகை தனிமங்கள் ஏற்றுமதியில் எந்தத் தடைகளும் இருக்காத என்று தெரிவித்தார். மேலும், இந்திய பிரதமர் மோடியையும் சிறந்த தலைவர் என்று டிரம்ப் கூறியது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல், இந்தியா மீதான வரியை அமெரிக்கா குறைக்கும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் சீனா மீதான வரியை அமெரிக்கா குறைந்திருப்பது கவனம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் அதிரடி வரி குறித்து இந்திய பிரதமர் மோடி பதிலளிக்காமல் இருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகிவருகிறது.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா என மூன்று நாடுகளும் மூன்று திசைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் நாடுகளாக இருந்து வருகிறது. தற்போதைய சூழலில் சீனாவின் நடவடிக்கைக்கு அமெரிக்கா பணிந்தது போல் தெரிந்தாலும் அமெரிக்காவிடமும் சக்திவாய்ந்த ஆயுதங்கள், இராணுவ படைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

