இஸ்ரேலுக்கு அதிர்ச்சி தந்த ஹமாஸ்... மூளையாக செயல்பட்ட மூவர்.. யார் இவர்கள்? அதிர்ச்சி பின்னணி!

இஸ்ரேலின் உயரிய உளவு கட்டமைப்பின் கண்ணில் மண்ணைத் தூவி ஹமாஸ் அமைப்பு நடத்திய திடீர் தாக்குதலை, ஹமாஸ் தரப்பில் தெளிவாக திட்டமிட்டு நிறைவேற்றியவர்கள் மூவர். ஒருவர் அரசியல்வாதி, மற்றொருவர் விருந்தினர், இன்னொருவர் வலிமையானவர். யார் இவர்கள்? பார்க்கலாம்..
Three men of Hamas Masterminds
Three men of Hamas MastermindsPuthiya thalaimurai

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த 7ஆம் தேதி தொடங்கிய போர், தற்போது இஸ்ரேல், ஈரான், சவுதி, பாலஸ்தீனம் பக்கமெல்லாம் நிற்குமளவு தீவிரமடைந்திருக்கிறது. இதன் பின்னணியில் மூவர் இருப்பதாக கூறப்படுகிறது. யார் இவர்கள்? இவர்களின் பின்னணி என்ன? பார்க்கலாம்...

ஆயிரங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், நிம்மதியின்றி தவிக்கிறது உலகம். இஸ்ரேல் மீது ஹமாஸ் பொழிந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதலை தோகாவில் அமர்ந்தபடி ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனியா பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.

Three men of Hamas Masterminds
விடாத இஸ்ரேல்; நிரம்பி வழியும் மருத்துவமனைகள்... என்ன நடக்கிறது காஸாவில்?

இஸ்மாயில் ஹனியா!

1962 ஜனவரி 29ல் காஸாவில் பிறந்த இஸ்மாயில், சிறுவயதின் பெரும்பகுதியை அகதிகள் முகாமில் கழித்தவர். இஸ்ரேலிடம் இருந்து தனிநாடு கேட்டு நடந்த பாலஸ்தீன போராட்டங்களை பார்த்து வளர்ந்தவர்.

ஐநா நிவாரண அமைப்புகள் மூலம் கல்வி கற்ற இஸ்மாயில், காஸா இஸ்லாமிய பல்கலையில் பட்டம் படித்தபோதே மாணவர் சங்க தலைவராகி, பின்னர் ஹமாஸில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.

1990களில் ஹமாஸில் தீவிரமாக பணியாற்றி, படிப்படியாக அந்த அமைப்பின் உயர் பதவிகளை எட்டினார்.

2006ல் பாலஸ்தீன ஆணையம் நடத்திய தேர்தலில் போட்டியிட்டு பிரதமரான இஸ்மாயிலை, 2007ஆம் ஆண்டு அதிபர் மகமூத் அப்பாஸ் அதிரடியாக நீக்கினார்.

அதை ஏற்க மறுத்த இஸ்மாயில், தொடர்ந்து காஸாவில் தனது அதிகாரத்தை செலுத்தி வந்தார். எனினும், ஹமாஸில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்த இஸ்மாயில், 2017ல் ஹமாஸ் அரசியல் பிரிவின் தலைவராக தேர்வானார். அதைத் தொடர்ந்து கத்தாரில் இருந்தபடி இஸ்ரேலில் அவரது உத்தரவுப்படி நடந்த தாக்குதல் காரணமாக, இஸ்மாயிலை சர்வதேச பயங்கராவதி என 2018ல் அமெரிக்காவை அறிவிக்கச் செய்தது. இவரைத்தான் ஹமாஸ் அமைப்பினர் அரசியல்வாதி (The Politician) என்கிறார்கள்.

முகமது டெய்ஃப்!

அடுத்தவர் முகமது டெய்ஃப். 1965ல் காஸாவின் அகதிகள் முகாமில் பிறந்த இவர், 1980களில் இருந்து ஹமாஸ் அமைப்பில் செயல்படுகிறார். தற்போது ஹமாஸ் அமைப்பின் ராணுவத் தலைவர். இஸ்ரேலிய வீரர்களை கடத்துதல், குண்டுவெடிப்பு தாக்குதல்களை நடத்துவதில் பெயர் பெற்றவர். எல்லைப் பகுதிகளில் நடந்த தொடர் தாக்குதல்களில் இஸ்ரேலியர்கள் பலர் கொல்லப்பட்டதால், இவருக்கு குறிவைத்தது இஸ்ரேல். ஒன்றல்ல, இரண்டல்ல 6 முறை இஸ்ரேலின் கொலை முயற்சியில் இருந்து தப்பியவர். எனினும், 2014ல் நடந்த கடைசி முயற்சியில் முகமது டெய்ஃப் படுகாயமடைந்ததால் அவரது கை, கால் செயலிழந்து, பார்வை பறிபோனது.

Three men of Hamas Masterminds
உலகை உலுக்கும் ஹமாஸின் ரகசிய சுரங்கம்! 100 அடிக்கு கீழே.. இவ்வளவு தூரமா??

அப்போது தலைமறைவானவர், நிலையான தங்குமிடம் வைத்திருக்கவில்லை. தினசரி ஒரு வீட்டில் தங்கி, விடியும் முன் அடுத்த இடம் மாறுவார். இதனால், ஹமாஸ் அமைப்பில் இவரதுபெயர் விருந்தினர் (The Guest).

யாயா சின்வார்!

மூன்றாவது நபர், 61 வயதாகும் யாயா சின்வார். 2011ல் விடுதலையாகும் வரை 23 ஆண்டுகள் இஸ்ரேலின் பல்வேறு சிறைகளில் இருந்தவர். ஹமாஸிடம் பணயக் கைதியாக இருந்த பிரெஞ்சு இஸ்ரேலிய வீரர் ஜிலாட் ஷாலித்துக்கு மாற்றாக இஸ்ரேல் இவரை விடுவித்தது.

இஸ்ரேலை நன்கு அறிந்தவர் என்ற வகையில், ஹமாஸ் அமைப்பினரின் போர் தந்திர வழிகளை துல்லியமாக தெரிவிப்பவர். 2015ல் அமெரிக்காவால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட சின்வார், ஹமாஸின் ராணுவ அமைச்சராக செயல்படுகிறார்.

இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை ஹமாஸுக்கு அதிக சேதாரமின்றி திட்டமிட்டு கொடுப்பவர் என்ற வகையில் அந்த அமைப்பினரால் வலிமையானவர் என்று புகழப்படுகிறார், ஹமாஸின் The Strongman சின்வார்.

அக்டோபர் 7ஆம் தேதி உலகமே எதிர்பாராத அளவுக்கு ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி, ஆயிரத்திற்கு மேற்பட்ட இஸ்ரேலியர்களை கொன்றதால், ஹமாஸ் அமைப்பையே ஒழித்துக் கட்டி, முடிவுகட்ட களமிறங்கியிருக்கிறது இஸ்ரேல். அதன் முதல் இலக்காக, ஹமாஸின் The Politician ISMAIL HANIYEH, The Guest MOHAMMED DEIF, The Strongman YAHYA SINWAR ஆகியோரை குறிவைத்திருக்கிறது இஸ்ரேல் ராணுவம்.

காஸா நகரில் இருந்து மக்கள் வெளியேற காலக்கெடு வழங்கி, தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வரும் நிலையில், இவர்கள் காஸாவில் இருக்கிறார்களா என்பது சந்தேகம் என்கிறார்கள்.

இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னையை நன்கறிந்த சர்வதேச அரசியல் பார்வையாளர்கள். இஸ்ரேல் மீது இதுவரை இல்லாத மிகப் பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்ட இவர்கள், அதனை வெளிநாடுகளில் இருந்தே செயல்படுத்தியிருக்கக் கூடும் என்கிறார்கள் சர்வதேச வல்லுநர்கள். எனவே, ஹமாஸுக்கு ஆதரவளித்து, இவர்களைப் பாதுகாப்பதாகக் கருதி கத்தார், ஈரான் உள்ளிட்ட நாடுகள் மீதும் இஸ்ரேலின் கோபப் பார்வை திரும்பியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com