'துப்பாக்கிகளை ஏந்தி களத்தில் நிற்பேன்'- தலிபான்களை மிரட்டும் ஆப்கானின் முதல் பெண் கவர்னர்

'துப்பாக்கிகளை ஏந்தி களத்தில் நிற்பேன்'- தலிபான்களை மிரட்டும் ஆப்கானின் முதல் பெண் கவர்னர்

'துப்பாக்கிகளை ஏந்தி களத்தில் நிற்பேன்'- தலிபான்களை மிரட்டும் ஆப்கானின் முதல் பெண் கவர்னர்
Published on

''சில நேரங்களில் நான் கவர்னர் அலுவலகத்தில் இருப்பேன். மற்ற நேரங்களில் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு போரில் இருப்பேன்'' இப்படி கூறியவர் ஆப்கான் கவர்னர் சலீமா மஜாரி. தலிபான்களுக்கு எதிரான போரில் ஆப்கான் ராணுவமே பின்வாங்கியபோதும் எதிர்த்து நின்றவர் இந்த போராளி சலீமா.

அவர் இப்போது தலிபான்களால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதை உறுதி செய்யும் விதமாக அந்நாட்டு பத்திரிகையாளர் நதியா தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஆப்கானிஸ்தானின் முதல் பெண் கவர்னர் சலீமா மஜாரி தலிபான்களால் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்க வேண்டும்'' என்றும் பதிவிட்டுள்ளார்.

யார் இந்த சலீமா மஜாரி?

1980 ம் ஆண்டு ஈரானில் பிறந்தவர் சலீமா மஜாரி. சோவியத் போரின் போது, அவரது குடும்பம் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி ஈரானில் வசித்தது. பல தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் அவர்கள் ஆப்கன் திரும்பினர். சுமார் 30,000க்கும் அதிமான மக்கள் வசிக்கும் வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள சர்கின்ட் மாவட்டத்தின் முதல் பெண் கவர்னர் சலீமா. கடந்த 2018ம் ஆண்டு கவர்னராக நியமிக்கப்பட்டார். 40 வயதான இவர், வெறும் கவர்னராக மட்டுமில்லை. அவர் கடந்த 2019ம் ஆண்டு முதல், தலிபான் எதிர்ப்பு போராளிகளுக்கு பயிற்சியும் அளித்து வருகிறார். தலிபானுக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக செயல்பட்டு வருபவர் சலீமா.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் சலீமாவின் மாவட்டத்தை பெருமளவில் தலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். அவர் மாவட்டத்தில் பாதுகாப்பை அதிகரிக்க 600 உள்ளூர் வாசிகளை நியமித்திருந்தார். நியமிக்கப்பட்ட 600 பேரும் ராணுவ வீரர்கள் அல்ல. சாதாரண விவசாயிகள் தான். அவர்கள் அனைவரும் தங்கள் கால்நடைகளை விற்று ஆயுதங்களை வாங்கி தலிபான்களுக்கு எதிராக களத்தில் நின்றவர்கள். ஆப்கானிஸ்தான் முழுவதும் அடிபணிந்தபோதும், இறுதிவரை போராடியது என்னமோ சலீமாவின் மாவட்டம் தான். அத்தகைய போர் குணம் படைத்த சலீமா இன்று தடுப்புக்காவலில்.

''இங்கே பெண்களுக்கு என்று சுதந்திரமான இடம் எதுவுமில்லை. ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றிய பிறகு பெண்கள் அனைவரும் வீடுகளில் சிறைவக்கப்பட்டுள்ளனர்'' என்று பேட்டி ஒன்றில் சலீமா தெரிவித்திருந்தார். அதேபோல ஆப்கானிஸ்தானின் முதல் பெண் மேயரான ஸரிஃபா கஃபாரி, இங்கிலாந்து ஊடகமான ஐநியூஸிடம், தாலிபான்கள் தன்னைக் கண்டுபிடிப்பதற்காக தான் காத்திருப்பதாகக் கூறினார்.

"அவர்கள் வருவதற்காக நான் இங்கே அமர்ந்திருக்கிறேன். எனக்கு அல்லது என் குடும்பத்திற்கு உதவ யாரும் இல்லை. நான் என் கணவருடனும் உட்கார்ந்திருக்கிறேன். என்னால் என் குடும்பத்தை விட்டு வெளியேற முடியாது. நான் எங்கே போவேன் ? " என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com