‘எனது மகளும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்’ - அதிபர் புதின்
கொரோனா வைரஸுக்கு எதிராக உலகின் முதல் தடுப்பூசியை ரஷ்யா பதிவு செய்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
உலகளவில் அதிதீவிரமாக பரவியிருக்கும் கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கு இந்த தடுப்பூசி பயனளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
‘எனக்குத் தெரிந்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசியை உருவாக்கியுள்ளதோடு, அதனை பதிவும் செய்துள்ளது. இதனை கண்டறியும் முயற்சியில் பணியாற்றிய அனைவருக்கும் நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
ரஷ்யாவில் இந்த தடுப்பூசி யாருக்கும் வலுக்கட்டாயமாக செலுத்தப் போவதில்லை. விருப்பம் உள்ளவர்கள் இந்த ஊசியை போட்டுக் கொள்ளலாம். எனது மகள்களில் ஒருவர் ஏற்கனவே இந்த கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.
பலகட்ட பரிசோதனைகளுக்கு பிறகு இந்த தடுப்பூசி திறம்பட செயல்படுகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது’ எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரேசில், இந்தியாவுக்கு அடுத்தப்படியாக கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள நாடுகளில் ரஷ்யா உள்ளது.
சுகாதார ஊழியர்களுக்கு இந்த தடுப்பூசியை பயன்படுத்துவதில் முன்னுரிமை வழங்கப்படும் என்று ரஷ்ய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.