மீண்டும் வரும் பாஞ்சியா கண்டம்! மனிதனுக்கு காத்திருக்கும் பேரழிவு? பகீர் கிளப்பும் விஞ்ஞானிகள்!
செய்தியாளர் - கார்த்திகேயன்
ஆசியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா, அன்டார்டிகா ஆகிய 7 கண்டங்கள் உலகத்தில் உள்ளன. ஆனால், உலகத்தின் ஆரம்ப காலகட்டங்களில் இந்த 7 கட்டங்களும் ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்ற மிகப்பெரிய ஒரே கண்டம் மட்டும் தான் இருந்தது. பின்னர், பூமியின் ஆழத்தில் வெப்பச் சலனம் ஏற்பட்டதாலும், டெக்டானிக் பிளேட்டுகள் நகர்ந்ததாலும், இந்த மிகப்பெரிய பாஞ்சியா கண்டம் உடைந்து, 7 துண்டுகளாக சிதறியது.
இந்த நிலையில், தற்போது பிரிந்திரிக்கும் 7 கண்டங்களும் ஒன்றாக இணைந்து, மீண்டும் பாஞ்சியா கண்டம் உருவாக போவதை, விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதாவது, பாஞ்சியா கண்டம் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உடைந்து பிரியத் தொடங்கியது போல, எதிர்காலத்தில் மீண்டும் கண்டங்கள் அனைத்தும் ஒன்றிணையத் தொடங்கும்.
இது பூமியின் தட்பவெப்ப நிலையில் கடுமையான மாற்றங்களை ஏற்படுத்தி, மனிதர்கள் உட்பட அனைத்து பாலூட்டி இனங்களும் இறந்து, பேரழிவு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. அனைத்து கண்டங்களும் ஒன்றிணைந்து ஒரு பெரிய நிலப்பரப்பாக மாறும்போது, அதன் மத்தியப் பகுதி கடலில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்தில் இருக்கும். இதனால் கடல் காற்றும், அதனால் ஏற்படும் ஈரப்பதமும் உட்பகுதிக்குச் செல்ல முடியாது.
இதன் விளைவாக, அந்த நிலப்பரப்பில் சுமார் 90 சதவீத பகுதி பயிர்களோ தாவரங்களோ வளர முடியாத கொடூரமான பாலைவனமாக மாறுவதால், பெரும் அழிவு ஏற்படலாம். இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளில் சூரியனின் கதிர்வீச்சு தற்போதைய நிலையை விட கணிசமாக உயர்ந்திருக்கும். இது புதிய பாஞ்சியா கண்டத்தை மேலும் சூடாக்குவதால், உயிரினங்கள் வாழவே முடியாத சூழல் ஏற்படும். இறுதியாக, புவிதட்டுகள் தொடர்ந்து நகர்ந்து வருவதால், நிலத்தின் அடியில் அழுத்தங்கள் உருவாகி, எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை பேரிடர்கள் நடந்து, பல பில்லியன் டன் அளவிலான கரியமில வாயு வெளியேறி பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு பல்வேறு காரணங்களால், பூமியின் வெப்பநிலை உயர்ந்து மனிதன் உள்ளிட்ட பாலூட்டி இனமே அழிய வாய்ப்பு உள்ளது.

