மார்ச் மாதம் வரவிருக்கும் முழு சந்திரகிரகணம்.. நிலவு இரத்தத்தைப்போன்று காட்சியளிக்கும்!
மார்ச் மாதம் வர இருகின்ற முழு சந்திரகிரகணம் சிவப்பு நிலாவாக இருக்கப்போகிறது. இதை blood moon என்கிறார்கள்.
பூமி சூரியனுக்கும் முழு நிலவுக்கும் இடையில் இருக்கும்போது முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இயற்பியலில் சூரிய உதயம் சூரிய அஸ்தமனத்தின் போது சூரியன் எப்படி சிவப்பு நிறமாக காட்சி அளிக்கிறதோ... அதே கோட்பாடைக்கொண்டு தற்பொழுது வர இருக்கும் சந்திரகிரகணமும் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். ரேலீ சிதறல் காரணமாக சந்திரனில் சிவப்பு நிறம் ஏற்படுகிறது.
அதாவது, சந்திரனை அடையும் ஒளியானது பூமியின் வளிமண்டலத்தின் வழியாக ஒளிவிலகல் செய்யப்படுவதால் சந்திரன் சிவப்பு நிறமாக மாறும், இது குறுகிய அலைநீளங்களை வடிகட்டி நீண்ட அலைநீள சிவப்பு நிறங்களை மட்டுமே விட்டுச் செல்கிறது. அதனால் நிலவானது சிவப்பு நிறத்தில் காட்சியளிக்க இருக்கிறது.
2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக பூமிக்கு முழு சந்திர கிரகணம் வருகிறது. இது மார்ச் 13, 14 ம் தேதி 2025 அன்று இரவு, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா பகுதியில் தெரியக்கூடும். இந்த கிரகணம் சுமார் 5 மணி நேரம் வரையில் நீட்டிக்கும் என்கிறார்கள்.
சென்னையில் சந்திரகிரகணம் தெரியுமா?
சென்னையில், அதன் நேரம் மற்றும் அடிவானத்துடன் ஒப்பிடும்போது சந்திரனின் நிலை காரணமாக கிரகணம் முழுமையாகத் தெரியாது. கிரகண கட்டங்களின் போது சந்திரன் அடிவானத்திற்குக் கீழே இருக்கும், இதனால் இந்த இடத்திலிருந்து நிகழ்வைக் கவனிக்க இயலாது.
ஆனால் இந்த வானியல் நிகழ்வினை பார்ப்பதற்கு பல வானியல் நிறுவனங்கள் மற்றும் ஆய்வகங்கள் குறிப்பிடத்தக்க வான நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளது.