முத்த தின சிறப்புப் பகிர்வு: The Kiss of life - உலகப் புகழ்பெற்ற உன்னத முத்தம்!

முத்த தின சிறப்புப் பகிர்வு: The Kiss of life - உலகப் புகழ்பெற்ற உன்னத முத்தம்!
முத்த தின சிறப்புப் பகிர்வு: The Kiss of life - உலகப் புகழ்பெற்ற உன்னத முத்தம்!

“அடுத்த நொடி ஒளித்துவைத்திருக்கும் அதிசயங்கள் ஏராளம்” என்றொரு சினிமா வசனம் உண்டு. அப்படியொரு அதிசய நொடியில் நிகழ்ந்த சுவாரஸ்யமானதொரு முத்தம் பற்றி சர்வதேச முத்த தினமான இன்று அறிந்துகொள்வோம்...

அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகைகளில் ஒன்று 'ஜாக்சான் வேலி ஜார்னல்', இந்த பத்திரிகையில் ரோக்கோ மொரபிடோ எனுமொரு புகைப்பட பத்திரிகையாளர் வேலை செய்தார். 1967-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது பத்திரிக்கை வேலை காரணமாக ரோக்கோ மொரபிடோ தன்னுடைய காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது தெரு ஓரம் இருந்த மின் கம்பத்தில் ஒரு காட்சியைப் பார்த்து அதிர்ச்சியானார்.


மின் கம்பத்தில் இரண்டு மின் ஊழியர்கள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தனர். அதில் ஒருத்தர் இன்னொருவரின் உதட்டில் உதடு பதித்து முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்தக் காட்சியைப் பார்த்த ரோக்கோ மொரபிடோ அவசரமாக காரை நிறுத்திவிட்டு. கார் ரேடியோ மூலமாக ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தார்.

பிறகு அந்தக் காட்சியை தன்னுடைய கேமராவில் உடனே பதிவு செய்தார். உண்மையில் மின் கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்தவர்கள் முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கவில்லை. சில நிமிடங்களுக்கு முன் மின்விபத்தில் பாதிக்கப்பட்டு மூர்ச்சையாகி இருந்த தன் சக ஊழியருக்கு CPR செய்து கொண்டிருந்தார். அதாவது 'கார்டியோபுல்மினேரி ரெசெசிடேசன்’ - வாய்வழி பிராணவாயு சிகிச்சை. ஆம் CPR செய்து தன் சக ஊழியரை காப்பாற்ற முயற்சி செய்துகொண்டிருந்தார் அந்த மனிதர். அப்படி காப்பாற்ற முயற்சி செய்தவரின் பெயர் ஜேடி தாம்ஸன்; மின் விபத்தில் பாதிக்கப்பட்டவர் பெயர் ராண்டல் ஜி. அந்த நொடியில் சம்யோஜிதமாக யோசித்து தன்னுடன் பணியாற்றிய ராண்டல் ஜியை காப்பாற்றிய ஜேடி தாம்சன் நிஜ ஹீரோவாக கொண்டாடப்பட்டார். உலக அளவில் பாராட்டப்பட்டார்.

விஷயம் அதுமட்டுமல்ல... அச்சம்பவம் நடந்தபோது அதிரடியாக எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் சமூக வலைதளங்கள் இல்லாத அந்த காலத்திலயே உலகம் முழுக்க வைரல் ஆனது. முக்கியமாக மனிதாபிமான சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகவும், முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் அந்தப் புகைப்படம் உள்ளதாக பலராலும் பாராட்டப்பட்டது.

அதோடு இல்லாமல் 1968-ஆம் ஆண்டு அந்தப் புகைப்படம் ‘ஸ்பாட்லைட் போட்டோகிராபி’ பிரிவில் ’புலிட்சர் பரிசு’ம் பெற்றது. கூடவே “The kiss of life” என அந்தப் புகைப்படத்திற்கு பெயரும் வழங்கப்பட்டது. அதாவது, 'வாழ்வின் முத்தம்'. அந்த மின்விபத்தில் பாதிக்கப்பட்ட ராண்டல் ஜி காப்பாற்றப்பட்டு அதன் பிறகு 35 ஆண்டுகள் வாழ்ந்தார்.

”The Kiss of Life” என பெயரிடப்பட்ட அந்தப் புகைப்படம் உலக அளவில் பல்வேறு புகைப்பட கண்காட்சிகளில் பங்குபெற்றது. புகழ்பெற்ற அந்தப் புகைப்படத்தை எடுத்த ரோக்கோ மொரபிடோ 1920-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நியூயார்க்கில் பிறந்தார். 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ப்ளோரிடாவில் தனது 88-வது வயதில் இறந்தார்.

இவர் தன்னுடைய 22-வது வயதில் இரண்டாம் உலகப் போரில் கன்னர் (Gunner) ஆக பணியாற்றியவர். யுத்தம் முடிந்த பிறகு புகைப்பட பத்திரிக்கையாளராக தனது வாழ்வை தொடர்ந்தார். ஒரு சுவாரஸ்யமனா தகவல் என்னவென்றால், அவர் நீண்ட காலமா வேலை செய்த 'ஜாக்சன்வேலி ஜார்னல்' பத்திரிகையை தன்னுடைய ஒன்பதாவது வயதில் வீதி வீதியாக சென்று விற்பனை செய்திருக்கிறார். பேப்பர் போடும் பையனாக இருந்த ரோக்கோ மொரபிடோ, பிறகு வளர்ந்து அதே பத்திரிகையில “The kiss of life” புகைப்படத்திற்காக தலைப்புச் செய்தியாவே ஆனார் என்பது வரலாறு.


அந்த நிகழ்வு நடந்து 40 ஆண்டுகள் கழிந்து 2008-ல் ரெதர் ஃபோர்டு எனும் இயக்குநர் அச்சம்பவத்தை ஓர் ஆவணப் படமாக இயக்கினார். அந்த ஆவணப்படம் 'ஜாக்சன் வேலி ஹிஸ்டோரிகல் ஸொசைட்டி'-யின் இணையதளமான 'ஜாக்ஸ்ஹிஸ்டரி டாட் ஓஆர்ஜி' என்ற இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டது.

தற்செயலாக ஒரு நிகழ்வை பார்த்த ஒருவர். அதனை புகைப்படம் எடுத்தார். எதிர்பார்க்காத அளவு அது கொண்டாடப்பட்டது. இதில் அவருடைய திறமை என கொண்டாட என்ன இருக்கு..? என்று சிலருக்கு தோன்றலாம்.

வாழ்வை எப்போதும் போட்டியாகவும் பலப்பரீட்சை மைதானமாகவும் மட்டுமே பார்க்க வேண்டியது இல்லை. நம் வாழ்க்கையில் ரசனை, சமயோஜித சிந்தனை இரண்டுக்கும் பெரிய இடமுண்டு. தனக்கு கிடைத்த ஒரேயொரு நொடியை சரியாக பயன்படுத்தின ரோக்கோ மொரபிடோ உலக அளவில் பேசப்பட்டார். ஒவ்வொரு நொடியிலும் சரியான விஷயங்களை மட்டுமே நாம் சிந்தித்தால் எவ்வளவு பெரிய உயரத்தையும் தொட்டுவிடலாம். தவிர, கலைக்கும் சக மனித நேசத்துக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்பு உண்டு. அது இந்த போட்டோவில் முழுமையாக வெளிப்பட்டிருக்கிறது. அதனால்தான் உலகின் உன்னத முத்தமாக கொண்டாடப்படுகிறது 'The Kiss Of Life'.

மனித இனத்துக்கே புதுப்புது வாழ்பனுபவத்தைத் தரும் இந்த கொரோனா பேரிடர் காலத்தில் 'ஒரு முத்தத்தால் வாழ்க்கையின் மகத்துவத்தையும், அன்பின் ஆற்றலையும் இத்தனை வலுவாக சொல்லிவிட முடியுமா?' என வியக்க வைக்கும் சமீபத்திய புகைப்படம் ஒன்று குறித்து விரிவாக அறிய > கொரோனா முத்தம் - புலிட்சர் பரிசு வென்ற புகைப்படத்தின் நெகிழவைக்கும் பின்னணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com