நெதர்லாந்தைச் சேர்ந்தவர் விம் ஹோஃப். இவருக்கு ‘ஐஸ் மனிதர்’ என்ற இன்னொரு பெயரும் உண்டு. ‘ஐஸ்’ என்று சொல்லும் போதே நமக்கு ‘ஜில்’ என்று இருக்கும். ஆனால் 57 வயதான இவர், பனிக் கட்டியில் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். இவர், தனது உடலை சிறுவயதில் இருந்தே பனிக் கட்டியில் இருக்கும் சூழலுக்குப் பழக்கப்படுத்தி வைத்துள்ளார். இதற்குப் பழக்கம் மட்டும் போதாது. மனவலிமையும், நம்பிக்கையும் வேண்டும். அது அதிகமாகவே இவரிடம் உள்ளது.
விம் ஹோஃப், ஜப்பான் தொலைக்காட்சி ஒன்றுக்காக ஐஸ் துகள்கள் நிறைந்த தொட்டியில் 2 மணி நேரம் அமர்ந்து சாதனைப் படைத்துள்ளார். அதன் பிறகு ஆர்க்டிக் கடலில் ஐஸ்கட்டிகளுக்கு அடியில் மூச்சைப் பிடித்துக் கொண்டு நீச்சல் அடித்துள்ளார். லேட்டஸ்ட்டாக பின்லாந்தில், பனி நிறைந்த சாலையில் வெறுங்காலில் மராத்தான் ஓடியும் சாதனை படைத்திருக்கிறார். இவ்வாறு இந்த ஐஸ் மனிதர் பனிக்கட்டியினுள் பல சாதனைகளை புரிந்து 3 முறை கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்தச் சாதனைகளுக்கெல்லாம் விம் சொல்லும் ஒரே காரணம், ஆழ்ந்த தியானம் மட்டுமே! இது போன்று மனதை ஈர்க்கக்கூடிய 26 சாதனைகளைக் கைவசம் வைத்து கொண்டு உலக சாதனைக்காகப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் இந்த, ஜில் ஜில், ஐஸ் மனிதர்.