‘வெடி பொருட்களை உருவாக்கியவர் ஆல்பிரட் நோபல்’: நோபல் பரிசு உருவான கதை!

‘வெடி பொருட்களை உருவாக்கியவர் ஆல்பிரட் நோபல்’: நோபல் பரிசு உருவான கதை!
‘வெடி பொருட்களை உருவாக்கியவர் ஆல்பிரட் நோபல்’: நோபல் பரிசு உருவான கதை!

உலகின் மிக உயரிய விருதுகளுள் ஒன்று நோபல் பரிசு. டைனமைட் உள்ளிட்ட பல வெடி பொருட்களை உருவாக்கிய ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்பவரே இந்தப் பரிசு உருவாகக் காரணமாக இருந்தார்.

உலக அமைதியையும் நல்லிணக்கத்தையும் விரும்புபவராக தற்காலத்தில் அறியப்படும் ஆல்பிரட் நோபல், ராணுவத்திலும், சுரங்கம் உள்ளிட்ட கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்படும் 150-க்கும் மேற்பட்ட வெடிபொருள்களைக் கண்டுபிடித்தவர். இவற்றில் அதிகமாக அறியப்படுவது டைனமைட். உண்மையில் டைனமைட்டை விடவும் சக்திவாய்ந்த பல வெடிபொருள்களை ஆல்பர்ட் நோபல் கண்டுபிடித்திருக்கிறார்.

அப்படியொரு ஆய்வு நடந்தபோது, பெரும் விபத்து நடந்தது. அதில் தனது சகோதரர் எமிலையும், பல தொழிலாளர்களையும் பறிகொடுத்தார். பல நாட்டு அரசுகள் இவரது வெடிபொருள்களைத் தடை செய்தன. இருப்பினும் தலைமறைவாக இருந்தபடியே பலவெடிபொருள்களை உருவாக்கினார் ஆல்பிரட் நோபல். இவற்றுக்குக் காப்புரிமை பெற்றதன் மூலம் வாழ்நாள் முழுவதும் பெரும் பணம் இவருக்குக் கிடைத்தது.

ஸ்வீடனின் மிகப்பெரிய பொறியியல் குடும்பத்தில் 1833 ஆம் ஆண்டு பிறந்த ஆல்பிரட் நோபலுக்கு மூன்று சகோதரர்கள் இருந்தனர். இவர்களில் எமில் தவிர, லுட்விக் நோபல் மற்றும் ராபர்ட் நோபல் போன்றோர் காஸ்பியன் கடலோரம் அஜர்பைஜான் நாட்டில் எண்ணெய்க் கிணறுகளில் முதலீடு செய்திருந்தனர். ஆல்பிரட் நோபலுக்கும் இதில் கணிசமான பங்கு இருந்தது.

1888 ஆம் ஆண்டில், லுட்விக் நோபலின் மரணத்தின்போது பல செய்தித்தாள்கள் ஆல்பிரட் நோபல் இறந்துவிட்டதாகச் செய்தி வெளியிட்டன. அதில் ஒரு பிரெஞ்சு இதழ், மரணத்தின் தூதர் இறந்துவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தது. இறப்பதற்கு முன்னரே தனது இரங்கல் குறிப்பைக் கண்ட ஆல்பிரட் நோபலின் மனம் வெடித்தது. வரலாற்றில் இப்படியொரு மோசமான மனிதனாக தாம் பதிவு செய்யப்படக்கூடாது என்று விரும்பினார்.

தனது சொத்து முழுவதையும் பொதுச் சேவைக்காகச் செலவு செய்வது என முடிவெடுத்த நோபல், பல உயில்களை எழுதினார். அதில் கடைசி உயில்தான் நோபல் பரிசு பற்றியது. தனது ஒட்டுமொத்தச் சொத்தின் 94 சதவீத்தை மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியில், மருத்துவம், அமைதி மற்றும் இலக்கியம் ஆகிய துறையில் பணியாற்றியவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். நோபல் பரிசுக்காக ஒதுக்கப்பட்ட தொகையின் தற்போதைய மதிப்பு சுமார் 1000 கோடி ரூபாய்.

1896-ல் பெருமூளை இரத்த கசிவின் காரணமாக நோபல் இறந்தார். அவரது விருப்பப்படி, 1901-ம் ஆண்டு முதல் 5 பிரிவுகளில் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வந்தன. 1969-ம் ஆண்டு முதல் ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தைக் கொண்டு நோபலின் பெயரிலேயே பொருளாதாரத்துக்கான பரிசுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

மனித உயிர்களைக் கொல்வதற்காகப் பயன்படும் வெடிபொருள்களைக் கண்டுபிடித்த நோபல், இறப்புக்குப் பிறகு தாம் நினைத்தபடியே சமாதானத் தூதராகவே அறியப்படுகிறார். இவரது பெயர் நோபல் பரிசுக்கு மட்டுமல்லாமல், நோபலியம் என்ற தனிமத்துக்கும் வைக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com