டெக்சாஸ் தாக்குதலை நடத்தியவருக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி?

டெக்சாஸ் தாக்குதலை நடத்தியவருக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி?

டெக்சாஸ் தாக்குதலை நடத்தியவருக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி?
Published on

டெக்சாஸ் தேவாலயத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய முன்னாள் விமானப்படை வீரர் டேவின் பேட்ரிக் கெல்லிக்கு துப்பாக்கி எப்படிக் கிடைத்தது என்பது குறித்து தெரியவந்துள்ளது. 

அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் கடந்த மாதம் நிகழ்ந்த இசை நிகழ்ச்சியின்போது எதிரே இருந்த ஹோட்டல் அறையில் இருந்தபடி ஸ்டீஃபன் பட்டாக் என்பவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 58 பேர் உயிரிழந்தனர். அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய தனி நபர் தாக்குதலாகவும் இது பதிவானது. இந்த தாக்குதல் நடந்து ஒரு மாதம் ‌நிறைவடைவதற்குள், டெக்சாஸில் மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது அமெரிக்க மக்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அங்குள்ள தேவாலயத்துக்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில், பாதிரியாரின் 14 வயது மகள் உள்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20‌க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்ற அந்த நபர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தன்னைத் தானே ‌தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த அந்த நபர் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகத் தொடங்கியுள்ளன.

முன்னாள் கடற்படை வீரரான அவரது பெயர் டேவின் பேட்ரிக் கெல்லி என்றும் 2012 ஆம் ஆண்டு தனது மனைவியையும், குழந்தையையும் கொடுமைப்படுத்தியதால், ராணுவ நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இத்தகைய தண்டனை பெற்றவர்கள் அமெரிக்காவில் து‌ப்பாக்கிகளை வாங்க முடியாது. அவர்களது குற்றப் பின்னணி குறித்த தகவல்கள் தேசிய தகவல் களஞ்சியத்தில் பதிவு செய்யப்பட்டு விடும் என்பதால், எந்தக் கடைக்கு சென்றாலும் அவர்களால் துப்பாக்கி வாங்க முடியாது.

அப்படி இருந்தும் கெல்‌லி துப்பாக்கி கொள்முதல் செய்து இந்த தாக்குதலை நடத்தியிருப்பது விமானப் படை அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தேசிய தகவல் களஞ்சியத்தில் கெல்லியின் குற்றப் பின்னணி எப்படி இடம் பெறாமல் போனது என்பது குறித்து விமானப் படை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. முதற் கட்ட விசாரணையில் அவரது குற்றத் தகவல்களை ‌தேசிய குற்ற தகவல் மையம் பதிவு செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது.

முன்னதாக கெல்லி சட்டப்பூர்வமாக அந்த துப்பாக்கியை வாங்கவில்லை என டெக்‌சாஸ் ஆளுநர் கிரெக் அப்பாட் தெரிவித்திருந்தார். ஆனால் சான் ஆன்டோனியோவில் உள்ள ஒரு துப்பாக்கிக் கடையில் இருந்து அதனை அவர் வாங்கி இருப்பது விசாரணையில் உறுதியாகி இருக்கிறது. மேலும் இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு முன்பாக தனது மாமியாருடன் கெல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் அடுத்தடுத்து நிகழும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை தொடர்ந்து தனி நபர்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கான சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்ற குரல்கள் தற்போது ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. வாஷிங்டனில் திரண்ட திரளான மக்கள் தனி நபர்கள் துப்பாக்கி வைத்திருக்க கடுமையான கட்டுப்பாடுகளை அரசு விதிக்க வேண்டும் என குரல் எழுப்பினர். ஒரு சில எம்.பி.க்களும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com