பறந்த கோடீஸ்வரர்கள்... சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வணிகரீதியான பயணம் தொடங்கியது

பறந்த கோடீஸ்வரர்கள்... சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வணிகரீதியான பயணம் தொடங்கியது
பறந்த கோடீஸ்வரர்கள்... சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வணிகரீதியான பயணம் தொடங்கியது
Published on

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதல்முறையாக வணிக ரீதியிலான பயணம் தொடங்கியுள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டின் மூலம், சுமார் 1,250 கோடி ரூபாய் செலவு செய்து மூன்று பணக்காரர்கள் பறந்திருக்கிறார்கள்.

அமெரிக்காவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஸ்பேக்ஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் ராக்கெட் நேற்றிரவு கிளம்பியது. நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான மைக்கேல் லோபஸ்-அலெக்ரியா தலைமையிலான வணிக ரீதியிலான பயணத்தில், மூன்று பெரும் பணக்காரர்கள் சென்றிருக்கின்றனர்.

அமெரிக்காவின் ஓஹியோவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் லாரி கன்னோர் , இஸ்ரேல் தொழிலதிபர் எய்டன் ஸ்டிப்பே , கனடாவைச் சேர்ந்த முதலீட்டாளர் மார்க் பதி ஆகியோர்தான் அந்த செல்வந்தர்கள். மொத்தம் 10 நாள் பயணத்தில், இவர்கள் மூவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 8 நாட்கள் தங்கியிருந்து அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வார்கள். இதற்காக ஒவ்வொரு பணக்காரரும் செலவழிக்கும் தொகை, இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 418 கோடியாகும். இதில் விண்வெளியில் உணவுக்கு மட்டும் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகிறது.

மூன்று பணக்காரர்களுடன் முன்னாள் விண்வெளி வீரர் மைக்கேல் லோபஸ் இருக்கும் எண்டவர் என்ற குமிழ், சர்வதேச விண்வெளி நிலையத்தோடு இன்று இணைகிறது. பயணத்தை வழிநடத்தும் மைக்கேல் லோபஸ் அலெக்ரியா, நாசாவில் பணிபுரிந்த காலத்தில் 1995 முதல் 2007ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 4 விண்வெளிப் பயணங்களை மேற்கொண்ட அனுபவமிக்கவர். நால்வரும் ஆக்சியம்-1 பணியாளர்கள் என்று அழைக்கப்படுவர். ஆக்சியம் என்பது வணிக ரீதியான விண்வெளி பயண நிறுவனம் ஆகும்.

சர்வதேச விண்வெளி நிலையம் என்பது, அமெரிக்கா, ரஷியா, கனடா, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து விண்வெளி ஆராய்ச்சிக்காக 1998ஆம் ஆண்டு பூமியின் சுற்று வட்டப்பாதையில் வடிவமைக்கப்பட்டதாகும். இதுவரை, அமெரிக்கா, ரஷ்யா உள்பட 15 நாடுகளுக்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்கள் ஆய்வுகளை நடத்திவிட்டு திரும்பியுள்ளனர்.

இதையும் படிக்க: 'கிரீன் கார்டு' கட்டுப்பாடுகளை தளர்த்துகிறதா அமெரிக்கா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com