
பிரான்ஸ் நாட்டின் புறநகர் பகுதியான நான்டெர்ரேயில் 17 வயது இளைஞர் நஹேல் என்பவர் தனது வாடகை காரில் சென்று கொண்டிருந்த போது காவல்துறையினரால் சுடப்பட்டது பிரான்ஸ் மக்களை போராட்டக் களத்திற்கு இழுத்துள்ளது. நான்டெர்ரேயின் அவென்யூ ஜோலியட்-கியூரி என்ற பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில் ஆவணங்களை சரிபார்ப்பதற்காக காரை நிறுத்தியபோது காரை நிறுத்தாமல் காவல்துறையினர் மேல் ஏற்றுவது போல் சென்றார். இதனால் தற்காப்புக்காகவே அவரை சுட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அங்கிருந்த சிசிடிவி கேமிராவில், மஞ்சள் நிற காரை நிறுத்தி காரை ஓட்டியவரை துப்பாக்கி முனையில் காவலர்கள் சில கேள்விகள் கேட்பதும் அவர்கள் கேட்டுக்கொண்டிருந்த போதே கார் கிளம்பத் தயாரானதும் காவல்துறையினர் சுடுவதும் பதிவாகியுள்ளது. ஆனாலும் கார் சில மீட்டர் முன் சென்று ஒரு கம்பத்தில் மோதி நின்றுள்ளது வேறு ஒருவர் எடுத்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதன் காரணமாக பல இடங்களில் போராட்டம் வெடித்தது. தனது மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என நஹேலின் தாயார் கேட்டுக்கொண்டார். இதனை அடுத்து கடந்த வியாழன் அன்று 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
முன்னதாக தனது மகனை இழந்த நிலையில் அவரது தாயார் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “செவ்வாய் கிழமை என் மகன் எனக்கு முத்தம் கொடுத்து லவ்யூ என்றான். நானும் பதிலுக்கு லவ் யூ என்று கூறி கவனமாக இருக்க வேண்டும் என கூறினேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் என் மகன் சுடப்பட்டான் என்கிறார்கள். நான் என்ன செய்ய போகிறேன்? அவர் என் உயிர். அவர் என்னுடைய சிறந்த நண்பராக இருந்தான். அவன் என் மகன். அவர் எனக்கு எல்லாமுமாக இருந்தான்” என கண்ணீர் மல்க பதிவிட்டிருந்தார்.
இளைஞர் சுடப்பட்ட விவகாரம் குறித்து பிரான்ஸ் அதிபர் கூறுகையில், இளைஞர் கொல்லப்பட்டது மன்னிக்க முடியாதது. சிறுவன் மரணத்தை எவ்விதத்திலும் நியாயப்படுதத முடியாது என்றும் தெரிவித்துள்ளார். துப்பாக்கியால் சுட்ட காவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைநகர் பாரீஸில் நடைபெற்ற போராட்டத்தின்போது பயங்கர வன்முறைகள் வெடித்தன. வாகனங்களுக்கு தீ வைத்து போராட்டக்காரர்கள் வன்முறைகளில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர, காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக இதுவரை 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டம் செய்பவர்கள் அமைதிகாக்குமாறு பிரான்ஸ் அதிபர் கூறியிருந்தும் 4 நாட்களாக தொடர்ச்சியாக வன்முறை நடந்து வருகிறது. இது குறித்து பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் கூறுகையில், கடந்த நாட்களை ஒப்பிடுகையில் போராட்டம் குறைந்துள்ளது என்றும் இதுவரை 471 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
போராட்டக்காரர்கள் துப்பாக்கிக் கடையை சூறையாடி அங்கிருந்த துப்பாக்கிகளை கொண்டு சென்றனர். தொடர் போராட்டத்தால் மார்சேய் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கும் 80 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமீப ஆண்டுகளாக பிரான்ஸ் போலீசாரால் சுடப்பட்டவர்கள் பெரும்பாலும் கறுப்பினத்தவர்களாகவும் அரேபியர்களாகவும் உள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 13 பேர் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றவில்லை என சுடப்பட்டுள்ளனர். தற்போது சுடப்பட்ட இளைஞரும் பிரெஞ்சு - அல்ஜீரிய வம்சாவளியை சேர்ந்த சிறுவன் என்பது குறிப்பிடத்தக்கது. 17 வயது இளைஞர் நஹெல் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.
இது குறித்து பிரான்ஸ் வாழ் தமிழரான ஸ்ரீதரன் புதிய தலைமுறையிடம் பேசினார். அதில், “காவலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை 79 காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். 3880 தீ வைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. 2000 வாகனங்கள் எரியூட்டப்பட்டுள்ளன. 492 கட்டடங்கள் எறியூட்டப்பட்டுள்ளது. இதனால் சில நகரங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
இரவு 9 மணியில் இருந்து அதிகாலை வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 45 ஆயிரம் போலீசார் கடமையில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் வெளியில் தெரியாத கூடாத வண்ணம் பாதுகாப்பு கொடுத்துள்ளனர். மிலான் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. சிறுவனின் இறுதிச் சடங்கிற்கு பின்பு தான் கூடுதல் தகவல்கள் தெரியப்படுத்தப்படும். இன்று விடுமுறை என்பதால் அனைவரும் வீடுகளில் இருக்கும்படி பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தியுள்ளனர். இங்கு வாழும் தமிழர்களின் சில வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டுள்ளது.
ஆரம்பக் கட்டத்தில் வன்முறையை தடுக்க 20 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபட்டு இருந்தனர். அதிக மக்கள் கலந்து கொண்டதால் காவல்துறையால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இப்போது 45 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த வன்முறையின் மூலம் அதிகமான களவுகள் நடந்து வருகிறது” என்றார்.