இனி ஊசி தேவையில்லை.. கொழுப்பைக் குறைக்க புதிய மாத்திரை அறிமுகம்!
உடலில் உள்ள கெட்ட கொழுப்பைப் பெருமளவில் குறைக்கும் புதிய மாத்திரைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
உடலில், கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே சக்திவாய்ந்த மருந்துகள் இருந்தாலும், அது நோயாளிகள் தங்களின் உடலில் ஊசி மூலம் செலுத்திக் கொள்ளும் வகையிலேயே உள்ளது. இந்த நிலையில்தான், உடலில் உள்ள கெட்ட கொழுப்பைத் தீவிரமாகக் குறைப்பதற்காக உலகப் புகழ்பெற்ற மருந்து நிறுவனமான 'மெர்க்' (Merck), ‘லிப்ஃபெண்ட்ரா’ (Lipfendra) என்ற புதிய மாத்திரையைக் கண்டுபிடித்துள்ளது. அந்த மாத்திரைக்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஜூலை 16 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்த மாத்திரை, கொலஸ்ட்ரால் மருத்துவ உலகில் ஒரு மிக முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. அதாவது, இந்த மாத்திரை, இதுவரை ஊசிகள் மூலம் மட்டுமே சாத்தியமாக இருந்த கொழுப்புக் குறைப்பு பலன்களை எளிய மாத்திரை வடிவில் வழங்குகிறது.
ஆய்வுகளில், இந்த மாத்திரை கொழுப்பின் அளவை 55 சதவீதத்துக்கும் மேல் குறைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நம் உடலில் உள்ள கல்லீரல், இரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்பை இயற்கையாகவே உறிஞ்சி அகற்றும் திறன் கொண்டது. ஆனால், உடலில் உள்ள 'PCSK9' என்ற புரதம், கல்லீரலின் இந்தச் செயல்பாட்டைத் தடுக்கிறது. லிப்ஃபெண்ட்ரா மாத்திரை இந்த PCSK9 புரதத்தின் செயல்பாட்டை முடக்குகிறது. இதனால் கல்லீரல் எவ்விதத் தடையுமின்றி இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை மிக வேகமாக உறிஞ்சி வெளியேற்றுகிறது. சந்தையில், 20 மிகி அளவில் கிடைக்கும் இந்த மாத்திரை, தினமும் காலையில் உணவு உண்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக இதை உட்கொள்ள வேண்டும். இந்த மாத்திரையால் பெரிய அளவில் பக்கவிளைவுகள் இல்லை என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் இதன் விலை ஒருநாளைக்கு சுமார் 10.50 டாலர்கள் (சுமார் 315 டாலர்கள்/மாதம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தற்போது புழக்கத்தில் இருக்கும் ஊசி மருந்துகளின் விலையை்விட 50% வரை குறைவு என்று மெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

