தீர்ப்பை ஏற்க மறுத்து நீதிபதிகள் முன்பே தற்கொலை செய்து கொண்ட ராணுவ தளபதி
நீதிமன்றத்தில் தனக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை ஏற்க மறுத்து, நீதிபதிகள் கண்முன்னாலேயே முன்னாள் ராணுவ தளபதி, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போஸ்னியா நாட்டில் நடந்துள்ளது.
போஸ்னியா நாட்டைச் சேர்ந்த முன்னாள் ராணுவ தளபதி ஸ்லோபோடன் பிராஜில்க் உட்பட 6 பேர், போர்க்குற்றம் புரிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 1992-1995 ஆம் ஆண்டுகளில் நடந்த போரின்போது இவர்கள் அனைவரும் இணைந்து போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக உறுதி செய்யப்பட்டு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த குற்றத்தை மறுத்த ஸ்லோபோடன் தரப்பினர், சர்வதேச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இதில் ராணுவ தளபதி ஸ்லோபோடன் உட்பட 6 பேருக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்த தீர்ப்பை நிராகரித்த ராணுவ தளபதி, நீதிபதிகள் கண்முன்னே எழுந்து நின்று விஷம் அருந்தினார். மேலும் தான் போர்க்குற்றவாளி இல்லை என்று உரத்த குரலில் கத்திவிட்டு ஸ்லோபோடன் மயங்கி விழுந்தார். இதனை கண்ட நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.