அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் ஆகியோர் பதவியேற்கும் நிகழ்வு புதன்கிழமை (ஜன.20) வாஷிங்டன் டிசியில் உள்ள நடக்க இருக்கிறது. இதற்கு முன்பு நடந்த அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாக்களைபோல் இல்லாமல், இந்த முறை பதவியேற்பு பேசுபொருள் ஆகியுள்ளது. பதவியேற்பு விழாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் அனைத்துமே பேசுபொருளாக மாற்றியுள்ளன.

முதல் நெருக்கடி கொரோனா. இதற்கு முன்னர் நடந்த பதவியேற்பு விழாவின்போது வாஷிங்டன் டிசிக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் படையெடுத்து வருவது வழக்கம். ஒபாமா முதல்முறை பதவியேற்கும்போது இருபது லட்சம் பேர் வருகை தந்ததாக சொல்கிறது தரவு. ஆனால், தற்போதுள்ள கொரோனா சூழ்நிலையில் இவ்வளவு பேர் கூடினால் ஆபத்தில் முடியக்கூடிய ஒன்றாக அமையும். இதனால்தான் இந்தமுறை பதவியேற்பு கொண்டாட்டங்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

பைடனின் குழுவினர் மக்கள் வாஷிங்டன் டிசிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு வருகின்றனர். கொரோனாவால் சுமார் 200 பேர் சமூக இடைவெளியை பின்பற்றி மேடையில் அமர்ந்திருப்பர் என 'வாஷிங்டன் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் உறுதி மொழி கூற இருப்பதால் மாஸ்க் அணியப்போவதில்லை என பைடன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். மேலும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பவர்கள் ஒருசில நாட்களுக்கு முன் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

பதவியேற்பின் கருப்பொருள் 'அமெரிக்கா ஒற்றுமையானது' எனக் காண்பிப்பதற்காகவே. ஆனால், தற்போது அமெரிக்கா பிளவுபட்டதற்கான அறிகுறிகள் எல்லா இடங்களிலும் தென்படுகின்றன. ஜனவரி 6ஆம் தேதி நடைபெற்ற கேபிட்டல் வன்முறை கூடுதல் அச்சத்தை தருகிறது. இந்த வன்முறை கும்பலை ஊக்குவித்ததாக குற்றம்சாட்டப்பட்டதால் டொனால்டு ட்ரம்ப் இந்தப் பதவியேற்பில் கலந்து கொள்ளமாட்டார். இதனால் அவரின் ஆதரவாளர்கள் மீண்டும் வன்முறையைத் தூண்டும் அபாயம் அதிகம். இதனால், ராணுவப் பாதுகாவலர்கள் வாஷிங்டன் டி.சி முழுவதும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பதவியேற்பு விழாவில் ட்ரம்ப் பங்கேற்காவிட்டாலும் முன்னாள் அதிபர்கள் பராக் ஒபாமா, ஜார்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் பில் கிளிண்டன் ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிபர் பதவியேற்பு விழாவின்போது அணிவகுப்புகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த முறை மெய்நிகர் அணிவகுப்பு நடைபெற இருக்கிறது. அணிவகுப்பைக் காண அமைக்கப்பட்டிருந்த மேடை அகற்றப்பட்டுள்ளது.

இந்த ஏற்பாடுகளுக்கு மத்தியில் அமெரிக்கா அதன் இருண்ட பக்கங்களில் ஒன்றை மாற்ற வேண்டும். அனைத்து கவனத்திற்கும் தகுதியான தருணம் இது. கலகக்காரர்கள் கேபிட்டலைத் தாக்கிய நிகழ்வுக்கு சரியாக இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அமெரிக்கர்கள் புதிய அதிபர் பதவி பிரமாணம் எடுக்கவுள்ளதை பார்க்க இருக்கிறார்கள். கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரோனா வரம்புகள் என பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இதனை பைடன் குழுவினர் நடத்த வேண்டிய கட்டாயத்தில் தற்போது உள்ளனர். இது பைடன் ஆட்சி பொறுப்பு ஏற்கும் முன்பே சந்திக்கும் முதல் சவாலாக பார்க்கப்படுகிறது.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com