வெளிச்சத்திற்கு வந்த சவுதி பட்டத்து இளவரசர் தொலைபேசி உரையாடல்

வெளிச்சத்திற்கு வந்த சவுதி பட்டத்து இளவரசர் தொலைபேசி உரையாடல்
வெளிச்சத்திற்கு வந்த சவுதி பட்டத்து இளவரசர் தொலைபேசி உரையாடல்

தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகி மிகவும் ஆபத்தான இஸ்லாமியர் என ட்ரம்ப் மருமகனுடன் சவுதி இளவரசர் பேசிய ‌உரையாடல் வெளியாகியுள்ளது.

சவுதி மன்னர், சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’பத்திரிகையில் எழுதி வந்தவர் ஜமால் கஷோகி (59). தனது காதலியை திருமணம் செய்து கொள்வதற்கா‌க ஜமால் கஷோகி கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி துருக்கி தலைநகர் இஸ்தான்புல் சென்றிருந்தார். 

அப்போது முதல் மனைவியை விவகாரத்து செய்ததற்கான ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்காக இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு சென்ற அவர், அதற்குப் பின் வெளியே வரவில்லை. சவுதி தூதரகத்துக்குள் சென்ற கஷோகியை தூதரக அதிகாரிகள் கொலை செய்துவிட்டதாக துருக்கி அரசும், ஊடகங்களும் சந்தேகம் எழுப்பின. ஆனால்,சவுதி அரசு இதனை தொடர்ந்து மறுத்து வந்தது. 

இதனையடுத்து சர்வதேச நாடுகள் கொடுத்த நெருக்கடியை தொடர்ந்து, அவர் கொல்லப்பட்டார் என்பதை ஒப்புக் கொண்டது சவுதி அரசு. இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்துக்குள் நடந்த மோதலில் கஷோகி படுகொலை செய்யப்பட்டதாக சவுதி அரசு அறிவித்தது. சவுதி தூதரகத்துக்குள் பத்திரிகையாளர் ஜமால் கஷோக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மேலும் இந்தப் படுகொலைக்கும், சவுதி மன்னர் குடும்பத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தூதரகம் கூறியது. இந்தச் சூழலில் அவரது உடல் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரக அதிகாரியின் வீட்டுத் தோட்டத்தில் இருந்து  கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அவரது முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும், பல துண்டுகளாக  அவரது உடல் வெட்டப்பட்டதாகவும், உடல் பாகங்கள் தோட்டத்தில் இருந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்டிருப்பதாகவும்  தெரியவந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மருமகன் ஜரெட் குஷ்ன‌ர் மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டனுடன் சவுதி பட்டத்து இளவரசர் மு‌கமது‌ பி‌ன் சல்மான் தொலைபேசியில் பேசிய தகவல் வெளியாகியுள்ளது. 

அதில் ஜமால் கஷோகி முஸ்லிம் பிரதர்வுட் என்ற அமைப்பில் தீவிரமாக இயங்கி வந்ததாகவும், அவர் ஒரு ஆபத்தான இஸ்லாமியர் என்றும் இளவரசர் சல்மான் கூறியதாக தெரியவந்துள்ளது. கஷோகி மாயமான ஒரு வாரத்துக்குப் பின், இந்தத் தொலைபேசி உரையாடல் நடந்ததாகவும் அமெரிக்க நாளிதழில் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் அமெரிக்க, சவுதி உறவை பாதுகாக்கும் நடவடிக்கையில் வெள்ளை மாளிகை ஈடுபட வேண்டும் என அப்போது இளவரசர் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனைதொடர்ந்து சவுதி இளவரசர் தெரிவித்த கருத்துக்கு, கஷோகியின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கஷோகியின் குடும்பம் வெளியிட்ட அறிக்கையை அமெரிக்க நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில் இஸ்லாமிய பிரதர்வுட் என்ற அமைப்பில் அவர் உறுப்பினராக இல்லை என்றும், ஏற்கெனவே இது தொடர்பாக கஷோகி உயிருடன் இருக்கும்போது விளக்கம் அளித்திருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சவுதி பட்டத்து இளவரசர் கூறியபடி கஷோகி ஆபத்தானர் இல்லை என்றும் அப்படி கூறுவது முட்டாள்தனமானது எ‌ன்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com