\
The adventurer who explored the world on foot for 28 years
Explorer Karl BushbyReuters

28 ஆண்டுகள்.. 50,000 கி.மீ.. நடந்தே உலகைச் சுற்றிவந்த சாகச மனிதர்!

உலகைச் சுற்றி பார்க்க நடந்தே பயணம் செய்ய வேண்டும் என்ற கனவுடன் புறப்பட்ட பிரிட்டனைச் சேர்ந்த 57 வயது சாகசப் பயணி, 28 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்.
Published on: 

செய்தியாளர் - M. மீரா

பிரிட்டனின் வடக்கு இங்கிலாந்தில் உள்ள ஹல் (Hull) நகரைச் சேர்ந்த கார்ல் புஷ்பி (Karl Bushby) என்பவர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். கடந்த 1998-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் உள்ள புன்டா அரீனாஸ் நகரில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கினார்.

Explorer Karl Bushby
Explorer Karl Bushbyreuters

சுமார் 50,000 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடந்த அவர், காடுகள், பனிக்கடல்கள், பல்வேறு நாடுகளின் எல்லைகள் எனப் பல சவால்களை எதிர்கொண்டார். பயணத்தின்போது மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்தாமல், தொடர்ந்து ஒரே பாதையில் தனது சொந்த ஊரைச் சென்றடைவதே அவரது இலக்காக இருந்தது.

அமெரிக்கக் கண்டங்களைக் கடந்து, அலாஸ்காவில் இருந்து ரஷ்யாவுக்கு பெரிங் ஜலசந்தியின் உறைந்த பனிப்பரப்பில் நடந்தார். பின்னர் மங்கோலியா, சீனா வழியாகப் பயணித்து, காஸ்பியன் கடலையும் நீந்திக் கடந்த அவர், தொடர்ந்து ஐரோப்பாவை நோக்கிப் பயணித்தார். கொலம்பியா - பனாமா இடையிலான அடர்ந்த காடுகளையும் எதிர்கொண்டுள்ளார்.

ஆரம்பத்தில் தனது பயணத்தை சுமார் 10 ஆண்டுகளில் முடித்துவிடலாம் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால், வழியில் இத்தனை தடைகள் ஏற்படும் என்று அவர் நினைத்துப் பார்க்கவில்லை. பனாமாவில் சிறிது காலம் சிறையில் அடைக்கப்பட்டது, மெக்சிகோவில் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டது, சட்டவிரோதமாக எல்லையைக் கடந்ததாக ரஷ்ய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டது எனப் பல சவால்களைச் சந்தித்துள்ளார்.

Explorer Karl Bushby
Explorer Karl Bushbyreuters

இதுதவிர, 2008-ம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா பெருந்தொற்றும் அவரது பயணத்தைத் தாமதப்படுத்தியுள்ளது. இதனால் 10 ஆண்டுகளில் முடிக்கத் திட்டமிட்ட பயணம் 28 ஆண்டுகளாக நீண்டது.

கடந்த மாதம் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த அவர், இறுதியாகத் தனது சொந்த ஊரான ஹல் நகரை அடைந்தார். அங்கு தாயார் ஏஞ்சலா அவரைக் கட்டியணைத்து வரவேற்றார். அவரின் 28 ஆண்டுகால சாகசப் பயணம் உணர்ச்சிப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது.

The adventurer who explored the world on foot for 28 years
சூரிய ஒளி விற்பனைக்கு.. 50,000 செயற்கைக்கோள்கள்.. இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்த அமெரிக்கா!