`நிலைமை ரொம்ப மோசமாகிடுச்சு; ப்ளீஸ் வெளியில் வராதீங்க’ மக்களை எச்சரிக்கும் தாய்லாந்து அரசு

`நிலைமை ரொம்ப மோசமாகிடுச்சு; ப்ளீஸ் வெளியில் வராதீங்க’ மக்களை எச்சரிக்கும் தாய்லாந்து அரசு
`நிலைமை ரொம்ப மோசமாகிடுச்சு; ப்ளீஸ் வெளியில் வராதீங்க’ மக்களை எச்சரிக்கும் தாய்லாந்து அரசு

தாய்லாந்தில்,  குறிப்பிட்ட அளவைவிட அதிக மாசு ஏற்பட்டிருப்பதால் அந்நாட்டு அரசு, மக்களை வெளியே வர வேண்டாம் என எச்சரித்துள்ளது.

தாய்லாந்தில் சமீபகாலமாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இது, அம்மக்களுக்கு அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், காற்று மாசுபாட்டினால் ஏற்படும் பாதிப்பை தடுக்க தாய்லாந்து அரசு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த நிலையில், தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில், உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தும் காற்று மாசு அளவைவிட 14 மடங்கு கூடுதலாக மாசடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

திடீரென மிகக் கடுமையாக காற்று மாசடைந்திருப்பதால், தாய்லாந்தில் பாங்காக் மற்றும் தாய் மாகாண மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அந்நாட்டு அரசு அறிவுறுத்தியிருக்கிறது. எந்த அவசியமும் இல்லாமல் மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும், வெளியே அதிக நேரம் இருப்பதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தாய்லாந்து மாசு கட்டுப்பாட்டுத் துறை, “காற்றின் தரக் குறியீடு பாங்காக்கில் பிஎம்2.5 என்ற அளவில் இருக்கிறது. இதனால், அங்கு வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் மக்களை வீட்டைவிட்டு வெளியில் வர வேண்டாம் என எச்சரித்திருக்கிறோம். அவர்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வகையில் வலியுறுத்தி இருக்கிறோம். குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு அவர்கள் எக்காரணம் கொண்டும் வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளது.

காற்று மாசினால் பாதிக்கப்பட்ட இருசக்கர வாகன ஓட்டியான காஞ்சனாபோர்ன் யாம்பிகுல், “என்னால் வாகனத்தைச் செலுத்த முடியவில்லை. காற்று மாசினால் கண்கள் எரிகின்றன” எனத் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில், உலகிலேயே காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் பாங்காக் ஆறாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தாய்லாந்தைச் சேர்ந்த டசிட் கச்சாய் என்ற 52 வயது நபர், அவர் பண்ணையில் இருந்து கிடைக்கும் தூய்மையான காற்றை விற்பனை செய்து இதன்மூலம், வருமானத்தையும் அள்ளி வருகிறார் என ஊடகங்களில் கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. முதல் ஒரு மணி நேரத்திற்கு, காற்றை அவர் 2,500 ரூபாய்க்கு விற்பதாகவும், அங்கு செல்பவர்களுக்கு உணவும் தங்கும் இடமும் இலவசமாக வழங்கப்படுகிறது எனவும் செய்திகள் வெளியாகி இருந்தன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com