தாய்லாந்து|மனைவியை பிரிந்த சோகம்....ஒரு மாதம் பீர் மட்டுமே உணவு; இறுதியில் என்ன நடந்தது?
தாய்லாந்தில் மனைவியை பிரிந்த சங்கடம் தாங்க முடியாமல் கணவன் செய்த செயல் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இறுதியில் என்ன நடந்தது பார்க்கலாம்.
தாய்லாந்தின் ராயோங்கின் பான் சாங் மாவட்த்தில் வசித்து வருபவர் 44 வயதான தவீசக் நம்வோங்சா என்ற நபர். இவருக்கு திருமணமான நிலையில் 16 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.
இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார். ஆனால், தவீசக்கிற்கு விவாகரத்து பெறுவதில் துளியும் விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில்தான் , கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருவருக்கும் விவாகரத்தும் கிடைத்துள்ளது.
இருவரும் பிரிந்து வாழ்ந்துவரும்நிலையில், மனைவியின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாத தவீசக் மன அழுத்ததிற்கும் மன உலைச்சலுக்கும் ஆளானதாக கூறப்படுகிறது. மனைவி பிரிந்த சோகத்தில், தவீசக் எந்த உணவையும் உண்ணவில்லை , மனைவியை பிரிந்த சோகத்தை மறக்க கிட்டதட்ட ஒருமாத காலம் மது மட்டுமே அருந்தியுள்ளார்.
அவரது மகன் எவ்வளவோ தெரிவித்தும் கேட்காத தவீசக் தனது மகன் அன்றாடம் சமைத்து வைக்கும் உணவில் ஒரு பருக்கை கூட உண்ணவில்லை. அவர் ஊட்ட முயன்றபோது அதனை மறுத்திருக்கிறார்.
இந்தநிலையில்தான், ஒரு நாள் பள்ளி முடிந்து தவிசக் மகன் வீடு திரும்பியபோது தனது தந்தை வலிப்பு நோயால் அவதிப்பட்டிருப்பதை கண்ட சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயற்சித்துள்ளார். ஆனால், மயக்கமடைந்த தவீசக்கை எத்தனை முறை எழுப்ப முயன்றும் அவர் எழவில்லை. சியாம் ராயோங் அறக்கட்டளையைச் சேர்ந்த மீட்புபணியாளர்கள் தவீசக்கை காப்பாற்ற முயற்சித்துள்ளன. ஆனால், அதற்குள் அவர் இறந்துவிட்டார் .
தவீசக் படுக்கையறையில் 100க்கும் மேற்பட்ட வெற்று பீர் பாட்டில்களை மருத்துவ உதவியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவர் படுக்கையில் இருந்து இறங்கும் வகையிலும், ஒரு குறுகிய பாதை மட்டுமே தெளிவாக இருக்கும் வகையிலும் பாட்டில்கள் சீரமைக்கப்பட்டிருந்தன. மனைவியை பிரிந்த சோகம் தாங்க முடியாமல் கணவன் இப்படி மது அருந்தியே உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.