'குகையில் இருந்த நாட்களில் நெருக்கம் அதிகரித்தது' தாய்லாந்து சிறுவர்கள் நெகிழ்ச்சி பேட்டி

'குகையில் இருந்த நாட்களில் நெருக்கம் அதிகரித்தது' தாய்லாந்து சிறுவர்கள் நெகிழ்ச்சி பேட்டி
 'குகையில் இருந்த நாட்களில் நெருக்கம் அதிகரித்தது' தாய்லாந்து சிறுவர்கள் நெகிழ்ச்சி பேட்டி

குகையில் இருந்த மீட்கப்பட்ட சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளரும் பல்வேறு புதிய தகவல்களைத் தெரிவித்திருக்கிறார்கள். அவற்றை விரிவாகப் பார்க்கலாம்.

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு நீச்சல் தெரியுமா, அவர்கள் ஏன் குகைக்குள் சென்றார்கள், நீர் சூழ்ந்த நிலையில் முதல் 9 நாள்களை எப்படிக் கழித்தார்கள் என்பன பல கேள்விகளுக்கு இப்போது விடை கிடைத்திருக்கிறது. தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளரும் மருத்துவச் சிகிச்சை முடிந்த பிறகு இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றனர். அவர்களிடம் கேட்க வேண்டிய சுமார் 100 கேள்விகள் முன்னரே தயார் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அந்தக் கேள்விகளுக்கு சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளரும் பதிலளித்தனர்.

சிறுவர்களுக்கு நீச்சல் தெரியாது என இதுவரை கூறப்பட்டு வந்த நிலையில், அது உண்மையில்லை என்று சிறுவர்கள் அப்போது கூறினர். கால்பந்து பயிற்சியின்போதே ஒவ்வொரு நாளும் நீச்சல் பயிற்சியும் மேற்கொண்டு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதற்கு முன் ஒருபோதும் குகைக்குள் சென்றதில்லை என்று கூறிய அவர்கள், குகைக்குச் செல்லும் முன்பாக, ஃபேஸ்புக்கில் அது பதிவிட்டதாகவும் கூறினர். குகைக்குள் சிறிது தொலைவு சென்றதும் நீர் உள்ளே வருவதைப் பார்க்க முடிந்ததாகவும், ஆனால் உடனடியாக வெளியேற முடியவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

நீர் நிரம்பிக் கொண்டிருந்த நிலையில், எந்த உயரம் வரை நீர் வரும் என்று தங்களுக்குத் தெரியாது என்று அவர்கள் தெரிவித்தனர். 9 நாள்களில் சுமார் 12 அடி வரை நீர் மட்டம் உயர்ந்து கொண்டே வந்ததாக பயிற்சியாளர் கூறினார். பாதுகாப்புக்காக குகையின் ஒரு பகுதியை உடைத்துக் கொண்டே இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். ஷிப்ட் முறையில் குகையை உடைக்கும் பணியில் ஈடுபட்டதாகவும், இடையிடையே குகையில் இருந்த நீரைப் பருகியதாகவும் அவர் கூறினார்.

மீட்புப் பணியின்போது, தாய்லாந்து நேவி சீல் வீரர் குனான் இறந்த செய்தி தங்களை குற்றவுணர்ச்சியில் தள்ளியதாகவும் அவர் கலங்கினார். அலட்சியமாக ஒருபோதும் நடந்து கொள்ளக்கூடாது என்பதைப் புரிந்து கொண்டிருப்பதாக பல சிறுவர்கள் தெரிவித்தனர். யார் குகையை விட்டு முதலில் வெளியே வர வேண்டும் என்பதில் தங்களுக்குள் எந்தப் போட்டியும் ஏற்படவில்லை என்றும், அந்த அளவுக்கு குகைக்குள் இருந்த நாள்களில் ஒருவருக்கொருவர் நெருக்கமாகி விட்டதாகவும் அவர்கள் கூறினர். தங்களை மீட்ட குழுவில் இடம்பெற்றிருந்த நேவி சீல் படையிலும், தாய்லாந்து கால்பந்து அணியிலும் இடம்பிடிக்க வேண்டும் என்று சிறுவர்கள் கூறினார்கள்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com